ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது பிரிட்டன்...
ஐரோப்பிய யூனியனில் 47 ஆண்டுகாலமாக உறுப்பு நாடாக இருந்த பிரிட்டன், நீண்ட இழுபறிக்கு பின் அதில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் முடிவு எடுத்தது. “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்பட்ட இதை நிறைவேற்ற முடியாமல் 2 பிரதமர்கள் ராஜினாமா செய்த பிறகு கடந்த ஆண்டு பிரதமர் பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சன் பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஏதுவாக நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார்.
அந்த தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்ற பின் பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் முதல் கட்டமாக பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் அதை அடுத்து பிரசல்சில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்திலும் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பிரெக்சிட் ஆதரவாளர்கள் இதனை வரலாற்று வெற்றியாக கொண்டாடி வருகின்றனர்.
பிரிட்டன் வெளியேறியதால் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற வளாகத்தில் இருந்து அந்நாட்டு கொடிகள் இறக்கப்பட்டன .பிரிட்டன் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 73 பேர் தங்களது பதவியை இழக்கின்றனர்.
30 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நீல நிறத்துக்கு பிரிட்டன் பாஸ்போர்ட்டுகள் மாறும். சர்வதேச வர்த்தகத்தில் பிரிட்டன் தன் சொந்த விருப்பத்தின்படி பேச முடியும். இந்த வரலாற்று நிகழ்வை குறிக்கும் வகையில், பிரெக்ஸிட்’ நினைவாக ‘ஜனவரி 31’ தேதியை தாங்கிய அரை பவுண்ட் மதிப்புள்ள 50 பென்ஸ் நாணயங்கள் இன்று புழக்கத்துக்கு வருகின்றன.
Comments