மாற்றுத்திறனாளி சிறுமி வழக்கு.. 15 பேர் குற்றவாளி - நீதிமன்றம்..!
சென்னை அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 15 பேரை குற்றவாளிகள் என போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வழக்கில் ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை அயனாவரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த காது கேளாத மாற்றுத் திறனாளி சிறுமியின் குறையை தனக்குச் சாதகமாக்கிய அக்குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார், சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
அவனைத் தொடர்ந்து குடியிருப்பில் பணிபுரிந்த பிளம்பர், காவலாளிகள் என 17 பேர் 7 மாதங்களாக சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலையில் இந்த விவகாரம் சிறுமியின் குடும்பத்தாருக்குத் தெரியவரவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிப்போட்ட இந்த சம்பவத்தில் ரவிகுமார், சுரேஷ், ராஜசேகர், எரால் பிராஸ், அபிஷேக், குமரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், பழனி, தீனதயாளன், பாபு, ராஜா, சூர்யா, குணசேகரன், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேரும் அடுத்தடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். அந்த உத்தரவு பிறகு ரத்து செய்யப்பட்டது.
வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞராக என்.ரமேஷ் நியமிக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் தரப்பில் தனித்தனியாக வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதிட்டனர். 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு வழக்கு மகளிர் நீதிமன்றத்துக்கும் பின்னர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட பாபு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, சிறையிலேயே இறந்துபோனான். மற்ற 16 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, காயமேற்படுத்துதல், கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இதுதவிர, 12 வயதுக்குக் குறைவான சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குற்றவியல் திருத்தச் சட்டத்தின் புதிதாக நிறைவேற்றப்பட்ட பிரிவுகளின் கீழும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், சனிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. 16 பேரில் 15 பேர் குற்றவாளி எனவும், வழக்கில் 15 ஆவது குற்றவாளியான தோட்டக்காரர் குணசேகருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லாததால் அவரை விடுவிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த 15 பேருக்குமான தண்டனை விவரம் வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
தீர்ப்புக்குபின் செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ், குணசேகரன் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து அரசிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
Comments