குருவி பாணியில் சைக்கோ வெற்றி விழா..! வினியோகஸ்தர்கள் ஜால்ரா
சைக்கோ படம் வெளியான 6 வது நாளில் நடந்த சைக்கோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், தான் முறைத்துப் பார்த்ததால் வானத்தில் இருந்து பொழிந்த மழையே ஒருநாள் நின்று போனதாகக் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான சைக்கோ திரைப்படம் வெற்றி பெற்று விட்டதாக கூறி சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
சைக்கோ படம் எத்தனை கோடியில் தயாரிக்கப்பட்டது? எத்தனை திரையரங்கில் வெளியிடப்பட்டது? எவ்வளவு வசூல் ஆனது? என்ற எந்த விபரமும் தெரிவிக்காமல் படம் வெளியான 6 வது நாளில் வெற்றி பெற்றுவிட்டதாக கூறி கொண்டாடப்பட்ட இந்த விழாவில் சைக்கோ படம் தர்பார் படத்தைவிட அதிகமாக வசூல் சாதனை புரிந்து விட்டதாக கொளுத்திப் போட்டார் வினியோகஸ்தர் ஐட்ரீம் மூர்த்தி.!
அவரது தர்பார் குறித்த பேச்சுக்கு அதே மேடையில் மறுப்பு தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், படங்களில் நடிக்கும் ரஜினியை தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறினார்.
தன்னிடம் எடுபிடி வேலைகளை செய்து கொண்டு விசுவாசமாக இருந்தவருக்கு, தான் வில்லன் வேடம் கொடுத்ததாக கூறிய மிஷ்கின், தான் ஒருமுறை முறைத்து பார்த்து சத்தமிட்டதால், வானத்தில் இருந்து பெய்த மழையே நின்று விட்டதாக தெரிவித்தார்.
விழாவில் தன்னை கண்டிப்பான இயக்குனர் என்பதை காட்டுவதாக நினைத்து கதாநாயகியை ஒருமையில் அழைத்து சர்ச்சையை பற்ற வைத்தார் இயக்குனர் மிஷ்கின்.
குருவி படத்திற்கு 150 வது நாள் வெற்றி விழா கொண்டாடி சாதனை படைத்த ரெட்ஜெயண்ட் மூவிஸ், தங்களின் சமீபத்திய வெற்றிப்படம் சைக்கோ என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments