குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிக்கியவர்களை நீக்கி விட்டு, புதிய தேர்ச்சி பட்டியல் வெளியீடு

0 1347

குரூப் 4 தேர்வு முறையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி டிஎன்பிஎஸ்சி உரிய ஆவணங்களுடன் புகார் அளித்ததை அடுத்து, சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது. 

குரூப்4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 14 பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 விடைத்தாள்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு எடுத்து வந்த பொறுப்பாளர் மாணிக்கவேல் மற்றும் ஏபிடி பார்சல் சர்வீஸ் வாகனத்தின் ஓட்டுநர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் ஏற்கனேவே கைது செய்ப்பட்ட டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் மற்றும் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாருக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

இதனிடையே தலைமறைவாக இருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமார் குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்து அவரது புகைப்படத்துடன் சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி அலுவலக வளாகம், பேருந்து, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அந்த நோட்டீசில், தகவல் தெரிப்போரின் ரகசியம் காக்கப்படும் என்றும், அவருக்கு அடைக்கலம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிசிஐடி எச்சரித்துள்ளது. தகவல் தெரிவிப்பதற்கான செல்போன் எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் தவறுகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இத்தேர்வு குறித்து விரிவான குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, உரிய ஆவணங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேசமயம், மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு, ஒருங்கிணைந்த வேளாண் பொறியாளர் தேர்வு, 2019ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வுகளில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சியின் புகாரை அடுத்து குரூப் 2 ஏ முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இதனிடையே, குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிக்கிய 39 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, தேர்ச்சி பெற்றோரின் புதிய பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

முதல் 100 இடங்களுக்குள் முறைகேடாக தேர்ச்சி பெற்றிருந்த 39 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, நேர்மையான முறையில் தேர்வு எழுதி, அடுத்தடுத்த இடங்களில் இருந்தவர்களை சேர்த்து புதிய தேர்ச்சி பெற்றோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1 முதல் 7 ஆம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்புக்கான ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு அவர்களை டிஎன்பிஎஸ்சி கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments