நிறைவடைந்த யானைகள் முகாம்.. பிரியாவிடை பெற்ற யானைகள்..!

0 1453

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 48 நாட்களாக நடைபெற்று வந்த யானைகள் முகாம் நிறைவடைந்த நிலையில், முகாமில் பங்கேற்ற யானைகளும் பாகன்களும் ஒருவரை ஒருவர் பிரிய மனமின்றி பிரிந்து சென்றனர்.

மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 12 வது யானைகள் நல்வாழ்வு முகாம் கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது.

48 நாட்களாக நடைபெற்ற இந்த புத்துணர்வு முகாமில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில்களில் இருந்து 28 யானைகள் பங்கேற்றன. அவைகளுக்கு நடைபயிற்சி, மருத்துவப் பரிசோதனை ஆகியவை வழங்கப்பட்டன.

கூந்தப்பனை, சோளத்தட்டு, மசால்புல், தென்னை பனை ஓலைகள், கரும்பு, பசுந்தீவனங்கள் உள்ளிட்ட சத்தான உணவுகள் யானைகளுக்கு வழங்கப்பட்டன.

இந்த முகாமுக்காக தமிழக அரசு சார்பில் ஒன்றரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு நிர்வாக அலுவலகம், பாகன்கள் தங்குமிடம், ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கான கொட்டகை, யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள தனி நடைபாதை, குளியல் மேடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன.

முகாமுக்குள் காட்டு யானைகள் நுழைந்துவிடும் என்பதால் அவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்க முகாமை சுற்றிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன. வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முகாமின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை காலையில் யானைகள் அனைத்தும் பவானி ஆற்றங்கரைக்கு அழைத்து செல்லபட்டு, ஆற்றில் குளிக்க வைக்கப்பட்டன.

பின் முகாமிற்கு அழைத்து வரப்பட்டு அலங்காரங்கள் செய்து கோயில் பூசாரிகள் சிறப்பு வழிபாடுகள் செய்தனர். யானைகளை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள் முகாமுக்கு வருவதற்கு முன்பு இருந்ததை விட தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக சான்றிதழ்கள் வழங்கினர்.

மதியத்திற்கு மேல், ஒவ்வொரு யானையையும் லாரியில் ஏற்றும் பணியை பாகன்கள் மேற்கொண்டனர். அப்போது அருகருகே இருந்த யானைகள் பிரிய மனம் இல்லாமல், தும்பிக்கைகளை ஒன்றோடு ஒன்று பிணைத்துக்கொண்டு தங்களது அன்பை வெளிப்படுத்தின.

யானைகளை அத்தனை நாட்களாக ஆர்வத்துடன் வந்து வேடிக்கை பார்த்த மக்களும் பிரிய மனமில்லாமல் விடைகொடுத்து அனுப்பி வைத்தனர்.

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் முகாமுக்கு வந்து சிறப்பு பூஜைகளுடன் யானைகளை வழியனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வனத்துறைக்கு சொந்தமான யானைகளுக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் புத்துணர்வு முகாம் நடத்தப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments