வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி பட்டப்பகலில் படுகொலை
புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் மர்ம கும்பலால் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கிருமாம்பாக்கம் முன்னாள் கவுன்சிலர் வீரப்பனின் மைத்துனரான சாம்பசிவம், வீட்டில் நடைபெறவுள்ள சுபநிகழ்வு ஒன்றுக்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் வைக்க காரில் சென்றுகொண்டிருந்தார். அங்குள்ள அரசுப்பள்ளி அருகே சென்றபோது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளது.
காரைவிட்டு இறங்கி தப்பியோட முயன்ற சாம்பசிவத்தை துரத்திச் சென்ற கும்பல், அரிவாளால் அவரது தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார், சாம்பசிவத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கொல்லப்பட்டவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் கவுன்சிலரான வீரப்பனும் 4 ஆண்டுகளுக்கு முன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட சதாசிவம், நிலம் விற்பனை, பணம் கொடுக்கல், வாங்கல் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட விவகாரங்களில் ஈடுபட்டு வந்தவர் என்று கூறப்படும் நிலையில், முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments