உயர்நீதிமன்ற வளாகத்தில் பேரணி நடத்துவதா? - தலைமை நீதிபதி அமர்வு கண்டனம்

0 1356

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது துரதிருஷ்டவசமானது என தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றும், வழக்கறிஞர்கள் போர்வையில் நக்சல்கள் அதிகரித்து வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்

சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் பாதுகாப்பை அமல்படுத்த கோரிய வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டதற்கு தலைமை நீதிபதி சாஹி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பங்கேற்றது வேதனை அளிப்பதாகவும், இது மாண்பை சீர்கெடுக்கும் செயலாக உள்ளது என்றும் தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்தது. இந்த பேரணியின் போது பிரச்சனை நிகழ்ந்திருந்தால் யார் மீது வழக்குப்பதிவு செய்வது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிமன்றம் பொதுச் சொத்து, தனி நபர்களுடையது அல்ல என்பது ஓய்வு பெற்ற நீதிபதிகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர். நீதிபதிகளாக இருந்தவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் நீதிபதிகளாக கருதப்படுவர். அவ்வாறு இருக்க வேண்டியவர்கள் நீதிமன்றத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படலாமா? இதை மன்னிக்கவே முடியாது என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

ஓய்வுபெற்ற நீதிபதிகள் நீதிமன்ற வளாகத்தில் பேரணி நடத்தியது குறித்து நீதிமன்ற பாதுகாப்பு குழு விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு குறிப்பிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றும், வழக்கறிஞர்கள் போர்வையில் நக்சல்கள் அதிகரித்து வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

நீதிமன்ற வளாகத்திற்குள் குடிப்பது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளதால், சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் முழுமைக்கும் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பை நிரந்தரமாக வழங்குவது தொடர்பாக நீதிமன்ற பாதுகாப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை மார்ச் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments