புரை ஏறினால் யாரோ நம்மை நினைக்கிறார்களா..! பின்னால் இருக்கும் உண்மை என்ன?
சாப்பிட்டு கொண்டிருக்கும்போது புரையேறினால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் அல்லது திட்டுகிறார்கள் என வேடிக்கையாக சொல்லி கொள்வோம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் உண்மை காரணம் குறித்து தற்போது பார்ப்போம்.
பொதுவான கருத்து:
சாப்பிட்டு கொண்டிருக்கும் போதோ, மடக்கு மடக்கென்று வேகமாக தண்ணீர் குடிக்கும் போதோ திடீரென்று புரை ஏறி அவஸ்தைபடுவோம். அவசரகதியில் சாப்பிட்டால் இப்படித்தான் நேரும் என பொதுவாக தெரியுமே தவிர்த்து, புரை ஏறுவதற்கு உரிய காரணம் குறித்து நிறைய பேருக்கு தெரியாது.
அருகருகே இருக்கும் குழாய்கள்:
மனிதனின் உடல் அமைப்பு மற்றும் உள்ளுக்குள் இருக்கும் உறுப்புகளின் அமைப்புகள் வியக்கத்தக்க அதிசயங்களாக உள்ளன. அந்த வகையில் நாம் சாப்பிடும் அனைத்தையும் உள்வாங்கி அனுப்பும் உணவுக்குழாயும், சுவாசிக்க காரணமாக இருக்கும் மூச்சுக்குழாயும் வாய்க்கு கீழ்புறம் அடுத்தடுத்து இருக்கின்றன.
மூச்சுக்குழாயின் செயல்பாடு:
இரு முக்கிய உறுப்புகள் அருகருகே இருந்தாலும் நாம் சாப்பிட கூடிய உணவுகள் மற்றும் தண்ணீர் எப்படி சரியாக உணவுகுழாய்க்கு செல்கிறது என்று யோசிக்கலாம். உணவுகளை முழுங்கும்போது மூச்சுக்குழாய் தானாகவே மூடி கொள்ளும் வகையில் அதன் செயல்பாடு உள்ளது.
எப்போது மாற்றம்:
இந்த செயல்பாட்டால் தான் சாப்பிடும் உணவுகள் மூச்சுகுழாய்க்குள் செல்வதில்லை. இயல்பாக பொறுமையாக சாப்பிட்டால் மூச்சுக்குழாயின் இந்த செயல்பாடு சரியாகவே வேலை செய்யும். ஆனால் பேசிக்கொண்டே சாப்பிடுவது, தீவிரமாக எதையாவது யோசித்து கொண்டே சாப்பிடுவது, வேகவேகமாக சாப்பிடுவது என இயல்பை மீறி நாம் உணவு அல்லது திரவங்களை எடுத்து கொள்ளும்போது மூச்சுகுழாயின் செயல்பாட்டில் கொஞ்சம் மாற்றம் நிகழ்கிறது.
மூச்சுக்குழாய்க்குள் உணவு:
உணவையோ அல்லது திரவத்தையோ வேகமாக உள்ளே எடுத்து கொள்ளும்போது அந்த வேகத்திற்கு ஈடாக மூச்சுக்குழாய் தானே மூடுவதில்லை. இதனால் சமயத்தில் உணவு குழாய்க்கு பதில் மூச்சுக்குழாய்க்குள் உணவு புகுந்து விடுகிறது.
புரை ஏற காரணம்:
தன்னுள் வெளி பொருள் நுழைந்து விட்டது என்பதை உணரும் மூச்சுக்குழாய், உடனடியாக அதனை வெளியேற்ற முயற்சிக்கிறது. இந்த முயற்சியில் மூச்சுக்குழாயின் தசைகள் தீவிரமாக வேலை செய்கின்றன. இதனால் தான் புரை ஏறி நாம் பயங்கரமாக இருமுகிறோம்.
உள்ளே என்ன நிகழும்:
மூச்சுக்குழாயின் இந்த தன்னியக்க செயல் காரணமாக ஏற்படும் இருமலால், சுவாசப்பையிலிருந்து வெளிவரும் அழுத்தமான காற்று மூச்சுக்குழாய்க்குள் சென்ற உணவை வெளியே தள்ளுகிறது. இதனால் மிகப்பெரிய ஆபத்து தவிர்க்கப்படுகிறது.
Comments