20 ஆண்டுகளாக செயற்கை சுவாசம்.. சிகிச்சைக்கு உதவ கோரிக்கை..!
கோவில் யானை தாக்கியதில் சுவாசக்குழாய் சேதமடைந்து 20 ஆண்டுகளாக கழுத்தில் பொருத்தப்பட்ட செயற்கை சுவாசக் குழாய் வழியே சுவாசித்து வரும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அறுவை சிகிச்சை உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வேதாரண்யம் அடுத்த வாய்மேடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் - கலைவாணி தம்பதியருக்கு கடந்த 1996ஆம் ஆண்டு சிந்து - சிவா என இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். 1999ஆம் ஆண்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு இவர்கள் குடும்பத்தோடு சென்றிருந்தபோது, அங்கிருந்த கோவில் யானைக்கு திடீரென மதம்பிடித்து, கலைவாணியையும் சிந்துவையும் தூக்கி வீசியுள்ளது.
இதில் அப்போது 3 வயது சிறுமியாக இருந்த சிந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரது சுவாசக் குழாயும் உணவுக் குழாயும் கடுமையான சேதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. உடனடியாக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிந்துவுக்கு அறுவை சிகிச்சை மூலம் கழுத்தில் செயற்கைக் குழாய் பொருத்தி, அதன் வழியே கரைத்த உணவுகளை உட்கொள்ளவும், சுவாசிக்கவும் மருத்துவர்கள் தற்காலிக ஏற்பாடு செய்தனர்.
அதன் பின்னர் கடந்த 2004ஆம் ஆண்டு உணவுக் குழாய் மட்டும் சரிசெய்யப்பட்டுள்ளது. சுவாசக்குழாயை சரி செய்ய முடியாததால் 20 ஆண்டுகளாக செயற்கை குழாய் மூலமே சுவாசித்து வரும் சிந்துவால் இயல்பாக பேசவும் முடியாத நிலை. காலை, மாலை என 2 வேளை சுத்தம் செய்து பொருத்த வேண்டிய அந்த செயற்கை சுவாசக் குழாயை சில மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இரவில் படுத்து உறங்கும்போது குழாய் கழன்று கீழே விழுந்துவிட்டால் மூச்சு நின்றுவிடும் அபாயம் உள்ளதாகவும் எனவே சிந்து உறங்கும்போது தாங்கள் உறங்காமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறுகின்றனர் அவரது பெற்றோர். இதற்கிடையே பள்ளிப் படிப்பையும் அதன்பிறகு பொறியியல் படிப்பையும் நல்ல மதிப்பெண்களோடு நிறைவு செய்திருக்கிறார் சிந்து.
நாகை, திருச்சி, வேலூர், சென்னை என பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளின் படிகளை ஏறி இறங்கியும் சுவாசக்குழாயை சரிசெய்ய போதிய வசதிகள் இல்லை என்று கூறிவிட்டதாகக் கூறுகிறார் ராஜேந்திரன்.
ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக நடத்துநரான ராஜேந்திரன் தன் சக்திக்கு மீறி இந்த 20 ஆண்டுகளில் பல லட்ச ரூபாயை மகளின் சிகிச்சைக்காக செலவிட்டுள்ளதாகக் கூறுகிறார். வெளிநாடு சென்றால் மட்டுமே சுவாசக் குழாய் அறுவை சிகிச்சை சாத்தியம் என்று கூறப்படுவதாகவும் அதற்கு அரசோ, தனியார் அமைப்புகளோ உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறார்.
Comments