பெரிய கோவில் குடமுழுக்கு புனித நீர் கலச ஊர்வலம்
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி இன்று காவிரி புனிதநீர் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் பிப்ரவரி மாதம் 5 ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகளுடன் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு மாதமாக புதுப்பிக்கப்பட்டு வந்த விமான கலசங்களில் தங்க முலாம் பூசப்பட்டு, நேற்று வரகு தானியம் நிரப்பி கோபுரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. இன்றுகாலை வெண்ணாற்றில் இருந்து காவிரி புனித நீரை கலசங்களில் எடுத்து, யானை மீது வைத்து சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக வந்தனர். இதில் ஏராளமான பெண்கள் முளப்பாரி எடுத்து வர, ஓதுவார்கள் தேவாரம், திருவாசகம், திருப்பன்னிசை பாடி வந்தனர்.
மாடவீதிகளில் வலம் வந்த புனித நீரை, யாகசாலை மண்டபத்தில் வைத்து பூஜித்து, யாகசாலை பூஜை தொடங்கியது. ஏராளமான சிவாச்சாரியார்கள் பூஜையை நடத்தி வருகிறார்கள். வரும் 5 ந் தேதி வரை 6 கால யாக பூஜைகள் நடைபெற உள்ளது.
Comments