தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தில் மீண்டும் பொருத்தப்பட்டது கலசம்....
தஞ்சை பெரியகோவிலில் புதுப்பிக்கப்பட்ட கலசங்கள் மீண்டும் கோபுரங்களில் பொருத்தப்பட்டன. மேலும் குடமுழுக்கிற்கான புனித நீர் எடுக்கும் பணி இன்று தொடங்குகிறது.
தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக கோவிலின் கோபுரங்களில் இருந்த கலசங்கள் அனைத்தும் 23 ஆண்டுகளுக்கு பின்னர் கீழே இறக்கப்பட்டு தூய்மைபடுத்தப்பட்டன.
அந்த கலசங்களில் புதிய தங்க முலாம் பூசப்பட்டதை அடுத்து. அவற்றை கோபுரங்களில் மீண்டும் வைக்கும் பணி நடைபெற்றது. இதில் மூலவர் விமான கோபுரத்தின் மீது பிரமாண்ட கலசத்தை வைக்கும் பணி நடைபெற்றது. அதில் 500 கிலோ நவதானியங்கள் நிரப்பப்பட்டன. பின்னர் பல்வேறு கட்ட சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கலசம் கோபுரத்தின் மீது ஏற்றப்பட்டது.
அப்போது சிவனடியார்களும் ஓதுவர்களுக்கும் பாடல்களை பாடினர். மேளதாளங்கள் முழங்க, வேதமந்திரங்கள் ஒலிக்க 12 அடி உயர கலசம் கோபுரத்தில் ஏற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கோவிலில் உள்ள மற்ற சன்னதி கோபுர கலசங்களும், கேரளாந்தகன் கோபுர கலசங்களும் ஏற்றப்பட்டன.
குடமுழுக்கிற்கான முதல்கால யாகபூஜை வருகிற நாளை மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. யாகபூஜைக்காக தஞ்சை பள்ளியக்கிரகாரம் வெண்ணாற்றில் இருந்து கலசத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டு தஞ்சபுரீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து யானை மீது புனிதநீர் அடங்கிய கலசம் வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
Comments