உத்தரப்பிரதேசத்தில் 22 குழந்தைகள் மற்றும் பெண்களையும் சிறைப்பிடித்தவன் சுட்டுக்கொலை....
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 23 குழந்தைகளை சிறைபிடித்து வைத்து மிரட்டிய ரவுடியை சுட்டுக் கொன்று, அனைத்து குழந்தைகளையும் போலீஸார் பத்திரமாக மீட்டனர். அப்போது பொதுமக்கள் கல்லெறிந்து நடத்திய தாக்குதலில் அந்த நபரின் மனைவி பலியானார்.
பரூக்காபாத் (Farrukhabad) மாவட்டம் கதாரியா கிராமத்தை (Kathariya) சேர்ந்த ரவுடி சுபாஷ் பாத்தம் என்பவன் 2011ம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் ஜாமீனில் வெளி வந்தான்.
இந்நிலையில் தமது மகளின் பிறந்தநாள் நிகழ்ச்சி வீட்டில் நடைபெறுவதாக கூறி, அப்பகுதியை சேர்ந்த 23 குழந்தைகளை வீட்டுக்கு நேற்று மதியம் அழைத்து வந்து துப்பாக்கி முனையில் சிறை பிடித்தான்.
சுபாஷ் பாத்தமின் வீட்டுக்கு குழந்தைகளின் பெற்றோர் வந்து பார்த்தபோது, அவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கியால் சுட்டான். இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் கமாண்டோ படையினர் விரைந்து வந்து வீட்டை சுற்றிவளைத்தனர்.
அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது தாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் தமது மனைவியை கிராமத்தினர் சிலர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகவும், அக்குற்றத்தை செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினான். தனக்கு பிரதமர் திட்டத்தின்கீழ் இலவசமாக வீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தான்.
பிறகு சிறைபிடித்திருந்த ஒரு குழந்தையை மட்டும் அவன் விடுவித்தான். 22 குழந்தைகளை விடுவிக்காமல் சிறை பிடித்து வைத்துக் கொண்டான். இதையடுத்து வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து அவனை சுட்டுக் கொன்று, 22 குழந்தைகளையும் போலீஸார் பத்திரமாக மீட்டனர்.
Comments