ரூ 20 கோடி கேட்டு ரஜினியை மிரட்டும் வினியோகஸ்தர்கள்..! தர்பார் சர்ச்சை பின்னணி

0 11036

தர்பார் படம் வெளியான  நான்கே நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் சாதனை என்று அறிவித்த நிலையில் தர்பார் படத்தால் தங்களுக்கு நஷ்டம் என கூறி நடிகர் ரஜினியிடம் 20 கோடி ரூபாய் கேட்டு வினியோகஸ்தர்கள் சிலர் மிரட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது  

250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரானதாக கூறப்பட்ட ரஜினியின் தர்பார் படம் வெளியான நான்கே நாட்களில் உலகெங்கும் 150 கோடி ரூபாயை வசூலித்ததாக பகிரங்கமாக அறிவித்தது லைக்கா புரொடக்சன்ஸ்..!

அதன் பின்னர் தொடர்ச்சியாக ஒருவாரம் பொங்கல் மற்றும் விடுமுறை தினங்கள் வந்ததால், சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட நகர்புறங்களில் பெரும்பாலான திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே படம் ஓடியது. அதன் பின்னர் மொத்தம் எவ்வளவு வசூலானது என்ற எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் படம் வெளியாகி 21 நாட்கள் கடந்த நிலையில் நட்டம் வந்தால் முழு பொறுப்பு ஏற்பதாக கூறி தர்பார் படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்கள் சிலர் 20 கோடி ரூபாய் வரை தங்களுக்கு நட்டம் என கூறி லைக்கா நிறுவனத்தை அனுகியுள்ளனர்.

அதற்கு லைக்கா தரப்பில் தர்பாரால் தங்களுக்கே 40 கோடி ரூபாய் வரை நட்டம் என்று கூறி வினியோகஸ்தர்களை, தங்களிடம் 40 கோடி ரூபாய் சம்பளமாக பெற்ற ஏ.ஆர். முருகதாஸ் வீட்டுக்கு திருப்பி உள்ளனர்.

அங்கு சென்று விசாரித்த போது ஏ.ஆர். முருகதாஸ் லைக்கா தயாரிப்பில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து புதிய படம் இயக்க சென்று விட்டதாக கூறியுள்ளனர். அதன் பின்னர் தர்பார் படத்தில் நடிக்க 100 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றதாக கூறப்படும் நாயகன் ரஜினிகாந்த் வீட்டுக்கு கும்பலாக சென்ற வினியோகஸ்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தங்கள் படத்தால் பெருத்த நட்டம் என்று மீடியாக்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்று மிரட்டியதாக கூறப்படுகின்றது.

இதனால், வினியோகஸ்தர்களுக்கு வெள்ளிக்கிழமை உரிய பதில் சொல்வதாக ரஜினி வீட்டில் இருந்து தகவல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு நின்ற செய்தியாளர்களிடம் என்ன காரணத்துக்காக வந்தோம் என்பதை சொல்ல மறுத்து வினியோகஸ்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

அதாவது தர்பார் படத்தின் மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட உரிமையை பெற்றவர் மதுரையை சேர்ந்த செல்வாக்கான நபர் என்றும், அவர் தங்களுக்கு 20 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கு காட்டி, அதனை ரஜினியிடம் மிரட்டி பெற்றுவிடும் திட்டத்தில் ஆதரவாளர்களுடன் சென்னைக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சென்னையில் அனைத்து திரையரங்குகளிலும் கம்ப்யூட்டர் முறையில் டிக்கெட் வழங்குவதால் எத்தனை டிக்கெட்டுக்கள் என்ன விலைக்கு விற்கப்பட்டது என்ற உண்மையான வசூல் விபரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி பார்த்தால் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி வினியோகஸ்தர்கள் லாபம் என்கிறார்கள்.

அதே நேரத்தில் கம்யூட்டர் மூலம் டிக்கெட் வழங்கும் நடைமுறை இல்லாத பல திரையரங்குகளில் தர்பார் படத்திற்கு எவ்வளவு விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டது என்ற முறையான கணக்கு காட்டபடவில்லை என்று கூறப்படுகின்றது.

கிராமப்புற திரையரங்குகளில் கூட தர்பார் படத்தின் ஒரு டிக்கெட்டிற்கு 200 ரூபாய் வரை விலைவைத்து விற்று லட்சக்கணக்கில் லாபம் பார்த்து விட்டு, அரசு நிர்ணயித்துள்ள 50 ரூபாய் கட்டணத்தில் டிக்கெட் விற்றது போல ரஜினியிடம் நட்ட கணக்கு காட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாபா, குசேலன், லிங்கா ஆகிய படங்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வினியோகஸ்தர்களுக்கு நட்டம் என்று பணத்தை திருப்பி கொடுத்திருப்பதால், அதே பாணியில் அரசியலுக்கு வரும் திட்டத்தில் உள்ள ரஜினியிடம் தற்போது கேட்டால் பணம் கிடைக்கும் என்று ரஜினி வீட்டுக்கு சென்றதாக திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து நட்டம் அடைந்ததாக கூறி ரஜினி வீட்டுக்கு சென்ற வினியோகஸ்தர்களில் ஒருவர் கூட இதுவரை பகிரங்கமாக வாய்திறந்து பேச மறுத்துள்ள நிலையில், இவர்கள் கேட்ட பணத்தை ரஜினி கொடுக்க மறுத்தால் தங்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டது போல குரல் கொடுக்க தொடங்குவார்கள் என்பதே கசப்பான உண்மை..!

தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் பிளாக் டிக்கெட் விற்பனையை தடுத்து நிறுத்துவதோடு, கணினி முறையிலான டிக்கெட் விற்பனையை நடைமுறைக்கு கொண்டு வந்தால் மட்டுமே பெரிய நடிகர்களின் படங்கள் லாபமா? நட்டமா? என்று உண்மையான வசூல் விவரத்தை கணக்கிட முடியும் என்கின்றனர் திரை உலகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments