காவல் ஆணையரின் பெயரில் போலி ஆவணம்... தொழில் அதிபர் கைது..!
சென்னையில் எஸ்ஸார் நிறுவன பெட்ரோல் பங்க் அமைப்பதற்கு காவல் ஆணையர் ஒப்புதல் அளித்தது போன்று போலியான ஆவணங்கள் தயார் செய்து, மோசடியில் ஈடுபட்ட ஆர்.கே. நகர் தொழில் அதிபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். போலி ஆவணம் தயாரித்து கொடுத்த கும்பலும் கூண்டோடு சிக்கியுள்ளது.
சென்னையில் புதிதாக பெட்ரோல் பங்குகள் அமைக்க வேண்டும் என்றால் சம்பந்தபட்ட இடம் பாதுகாப்பானது என்று சென்னை காவல் ஆணையரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்பது கட்டாயம் நடைமுறையில் உள்ளது.
ஆனால், காவல் ஆணையரிடம் அப்படி எந்த ஒரு தடையில்லா சான்றிதழும் பெறாமல் ஆர்.கே நகரை சேர்ந்த கே.எல்.எஸ் நிறுவன அதிபர் சிவகுமார் என்பவர் எஸ்ஸார் நிறுவன பெட்ரோல் பங்குகளை பல இடங்களில் அமைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதுதொடர்பாக எஸ்ஸார் ஆயில் நிறுவனத்தில் காவல் துறையினர் விசாரித்த போது காவல் ஆணையர் வழங்கிய தடையில்லா சான்று போலவே போலியான ஆவணங்களை கொடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சென்னை காவல் ஆணையர் அலுவலக நிர்வாக பிரிவு துணை ஆணையர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தொழில் அதிபர் சிவக்குமாரை கைது செய்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் காவல் ஆணையர் வழங்கிய தடையில்லா சான்று போல போலியான ஆவணங்களை தயாரிக்க உடந்தையாக இருந்த திருவொற்றியூர் முகேஷ், அகரம் ஜெயபிரகாஷ், சுரேஷ், பெரியார் நகர் ரமேஷ்பாபு ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி ஆவணம் தயாரிக்கப் பயன்படுத்திய காவல் ஆணையர் அலுவலக போலி ரப்பர் ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை காவல் ஆணையர் அலுவலக முத்திரையையே போலியாக தயாரித்த வழக்கில் சிக்கி உள்ள சிவக்குமார், வட சென்னையில் பிரபலமான தொழில் அதிபர் என்று கூறப்படுகின்றது.
பெட்ரோல் பங்குகள், தங்கும் விடுதிகள், லாரிகள் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம் என ஏராளமான தொழில்களில் கோலோச்சி வந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
Comments