மற்ற மாசுக்களை விட, பொய்யான தகவலை பரப்புவதே மிகப்பெரிய மாசு - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
தமிழ்நாட்டை பாதிக்கும் மற்ற மாசுக்களை விட, பொய்யான தகவலை பரப்புவதே மிகப்பெரிய மாசாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மின்சாரம் தயாரிக்க தொடங்கி வைக்கப்பட்ட சோலார் பேனல் திட்டம் குறித்து பல தவறான தகவல்களை கோவையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவர் வாட்ஸ் ஆப்-பில் பரப்பியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரின் ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டார்.
இதில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சேஷசாயி முன்னிலையில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொறுப்பற்ற வதந்திகள் பரப்புவதை எற்று கொள்ள முடியாது என்றார்.
தமிழ்நாட்டில் பொய்யான தகவல் பரப்புவதே மிகப்பெரிய மாசுவாக உள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.சமூக வலைதளங்களில் எந்த வித தார்மீக தகுதியும் இல்லாத நபர்களால் செய்திகள் பரப்பப்படுவதாக குற்றம் சாட்டிய நீதிபதி, மனுதாரர் தன் தவறை உணர்ந்து, எந்த வித ஆதாரமும் இல்லாமல் வதந்தியை பரப்பியதாக அதே வாட்ஸ் ஆப் குரூப்பில் பதவிட சம்மதித்தால்,ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்து, விசாரணையை பிப்ரவரி 5 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Comments