அதிபர் டிரம்பின் இந்தியா வருகையின் போது ரூ.71 ஆயிரம் கோடி வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிறது?

0 1750

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியா வருகையின் போது 71 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் பிப்ரவரி 24 அல்லது 25 ஆம் தேதி இந்தியா வர இருக்கிறார். அப்போது இந்தியா - அமெரிக்கா இடையே 71 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லிக்திசைர், மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ்கோயலை பிப்ரவரி 2வது வாரத்தில் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அரசு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டீல் அலுமினியத்திற்கு, 10 சதவீத வரி விதித்ததை அடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு இந்தியா வரி விதித்தது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா முறையிட்டது. மேலும் அமெரிக்க சந்தையில் வரி சலுகைகள் அளிக்கப்படும் முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டது. அதனால் சில பொருட்களை வரி இல்லாமல் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை இந்தியா இழந்தது. அதனால் அமெரிக்கா உடனான வர்த்தக உறவை மீண்டும் சீரமைக்க இந்தியா விரும்புகிறது.

அதே போன்று அமெரிக்க தகவல் தொடர்பு தொழில்நுட்ப சாதனங்களுக்கு வரி விலக்கு, பால் பொருட்களை இறக்குமதிக்கு அனுமதிப்பது,ஹார்லே டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு வரி குறைப்பு போன்ற முக்கிய அம்சங்களில் இந்திய அரசுடன் தீர்வு காண டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை அமெரிக்காவுடனான இந்தியாவின் ஏற்றுமதி 35.6 பில்லியன் டாலர் மதிப்பிலும், இறக்குமதி 25.1 பில்லியன் டாலர் மதிப்பிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments