நியூசிலாந்து வெற்றி பெற தகுதி வாய்ந்த அணி... விராட் கோலி
இன்று நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 போட்டியில், சூப்பர் ஓவர் மூலம் இந்திய அணி ஜெயித்திருந்தாலும், வெற்றி பெற நியூசிலாந்து நிச்சயம் தகுதி வாய்ந்த அணி தான் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
3-வது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 179 ரன்களை எடுத்தது. 180 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய நியூசி., அணியும் 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்களையே எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது. இதில் அந்த அணி கேப்டன் கேன் வில்லியம்சன், அபாரமாக ஆடி 48 பந்துகளில் 95 ரன்களை குவித்தார்.
பின்னர் நடைபெற்ற சூப்பர் ஓவரில் 17 ரன்களை குவித்தது நியூசிலாந்து. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா கடைசி 2 பந்துகளை சிக்சருக்கு விரட்டி அணியை வெற்றி பெற செய்தார். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் பேசிய விராட் கோலி, நங்கள் ஒரு கட்டத்தில் தோற்க போகிறோம் என்று தான் நினைத்தேன்.
அந்த அளவிற்கு பிரமாதமாக ஆடினார் கேன் வில்லியம்சன். நான் எங்களது கோச்சிடம், அவர்கள் வெற்றி பெற தகுதியானவர்கள் என்று கூறினேன். எனினும் இந்த போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றதால், வில்லியம்சன் மிகவும் மோசமாக உணர்ந்திருப்பார். ஏனென்றால் அதிரடியாக விளையாடியும் வெற்றி வசப்படாவிட்டால் ஏற்படும் உணர்வுகள் எனக்கும் தெரியும் என்றார் கோலி.
மேலும் பேசிய கோலி, போட்டியின் முதல் பாதியிலும், கடைசி இரண்டு பந்துகளிலும் ரோஹித் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டார். அவர் ஒரு பந்தை அடித்து அடிவிட்டாலே, பந்து வீச்சாளர் உடனடியாக அழுத்தத்திற்கு உள்ளாவர் என குறிப்பிட்டார் கோலி.
Comments