கொரோனா வைரஸ்.. தமிழகத்தில் கண்காணிப்பில் 51 பேர்....
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழகத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சீனாவில் இருந்து தமிழகம் வந்த 51 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று ஆய்வு செய்தார். தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி மற்றும் விமான நிலைய உயர் அதிகாரிகளுடன் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு 2 விதமான ஸ்கேனிங் செய்யப்படுகிறது என்றார்.
சென்னை விமான நிலையத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் 5 பேர் பணியில் உள்ளதாகவும், அங்கு 'தெர்மல் ஸ்கேனர் யூனிட்' உள்ளது என்றும் அவர் கூறினார். அதன்மூலம் ஒருவர் அதில் நின்றாலே, அவருடைய உடலின் வெப்பநிலையை அறிய முடியும் என்றும் பீலாராஜேஷ் தெரிவித்தார்.
கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களிலும் இதே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் உஷார் நடவடிக்கைக்காக 1 லட்சம் முக கவசங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்க பொதுமக்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் பீலா ராஜேஷ் விளக்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி, கொரோனா வைரஸ் எதிரொலியால் சீனாவில் இருந்து தமிழகம் திரும்பி உள்ள 51 பேரை தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
Comments