குரூப்-4 தேர்வு முறைகேடு.. ஊற்றுக்கண்ணாக விளங்கிய எஸ்.ஐ?
குரூப்-4 தேர்வு முறைகேட்டில், காவல் உதவி ஆய்வாளர் அந்தஸ்தில் காவல்துறையில் பணியாற்றும் நபர் இடைத்தரகராக செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அவரது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையமான TNPSC நடத்தும், குரூப்-4 தேர்வில், ராமநாதபுரம் மாவட்டத்தில், குறிப்பிட்ட இரண்டு மையங்களில் தேர்வு எழுதிய, ஆடு மேய்க்கும் தொழிலாளி உள்ளிட்டோர் அதீத தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்தது. இதன்மூலம், டிஎன்பிஎஸ்சி.யின் நம்பகத்தன்மை கேள்விக்குறியான நிலையில், இந்த புகார் குறித்து, சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. குருப்-4ல் மட்டுமின்றி, குரூப்-2ஏ, குரூப்-1 தேர்வுகளிலும் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. 6ஆவது நாளாக, விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கும் சிபிசிஐடி போலீசார், இடைத்தரகர்கள், பணம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்றவர்கள் என இதுவரை 14 பேரை கைது செய்திருக்கின்றனர்.
இந்நிலையில், காவல்துறையில், உதவி ஆய்வாளர் அந்தஸ்தில் பணியாற்றும் ஒருவரின் குடும்பத்தினர், ஒட்டுமொத்தமாக பலன்பெற்றிருப்பதாக, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், "மறைக்கப்பட்ட உண்மை" என தலைப்பிட்டு, நேர்த்தியாக அச்சிடப்பட்ட தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இதில், காவல் உதவி ஆய்வாளரான அந்த நபரின், மனைவி மற்றும் எஸ்.ஐ தம்பி, தம்பி மனைவி, மற்றொரு தம்பி என நான்கு பேர் கடந்தாண்டு குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறப்பட்டிருக்கிறது. இதில், எஸ்.ஐ.யின் தம்பி, குரூப்-2 தேர்வில், தமிழ்நாட்டளவில் 3ஆவது இடமும், எஸ்.ஐ மனைவி 5ஆவது இடமும், தம்பி மனைவி 6ஆவது இடமும் பிடித்திருப்பதாக, அந்த வைரலாகும் தகவலில், தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், காவல் உதவி ஆய்வாளரின் மற்றொரு தம்பி, குரூப்-4 தேர்வில், மாநில அளவில் 10ஆவது இடத்திற்குள் தேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஆனால், ராமநாதபுரத்தை மையமாக கொண்டு தேர்வு எழுதி, மாநில அளவில், முதல் 10 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அந்த வைரலாகும் தகவலில் கூறப்பட்டுள்ளது. சென்னை காவல்துறையில் பணியாற்றும் அந்த உதவி ஆய்வாளர், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உதவியுடன், சுமார் 200 பேருக்கு, கடந்த 3 ஆண்டுகளில், குரூப்-2 தேர்வுக்கு 13 லட்ச ரூபாயும், குரூப்-4 தேர்வுக்கு 9 லட்ச ரூபாயும் என்ற கையூட்டு பெற்று, முறைகேடாக வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும், அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, குரூப் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும், சிபிசிஐடி அதிகாரிகளிடம் கேட்டபோது, குற்றம்சாட்டப்படும் குறிப்பிட்ட ஆண்டுகளில், தேர்ச்சி பெற்று, பணியில் உள்ளவர்களின் விவரங்களை டி.என்.பி.எஸ்.சி.யிடம் கேட்டிருப்பதாக தகவல் அளித்தனர். மேலும், தற்போது, காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக, சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் தகவல் குறித்து, முழுமையாக விசாரிக்கப்படும் என்றும், சிபிசிஐடி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே குரூப் 4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றதாக கூறப்படும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்த நபரும் தற்போது புகாருக்கு ஆளாகியுள்ள எஸ்ஐயும் சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணூரை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
Comments