ஒழுக்கம், மன உறுதி கொண்ட இளைஞர்கள் இருக்கும் தேசம், வளர்ச்சியின் பாதையில் செல்வதை தடுக்க முடியாது
ஒழுக்கம், மன உறுதி கொண்ட இளைஞர்கள் இருக்கும் தேசம், வளர்ச்சியின் பாதையில் செல்வதை தடுத்து நிறுத்த முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய மாணவர் படையின் பேரணியையொட்டி நடத்தப்பட்ட அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ரஷ்யா, பூடான் மற்றும் நேபாளம் நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன், சாகச விளையாட்டுகளையும் செய்து காட்டினர். என்சிசி படைப்பிரிவினரில் சிறந்து விளங்கியோருக்கு பிரதமர் விருதுகள் வழங்கினார்.
பின்னர் அவர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 65 சதவீதத்திற்கு மேல் 35 வயதிற்கு கீழே உள்ளவர்களைக் கொண்ட உலகின் இளமையான நாடுகளுள் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்றார். இது நமக்கு பெருமிதம் அளித்தாலும், இளமையாக சிந்திப்பது நமது பொறுப்பாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
இளைஞர்கள் நாட்டுக்காகப் பணியாற்றுவதற்கான ஒழுக்க உணர்வு, குறிக்கோள் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுகளை வலுப்படுத்த தேசிய மாணவர் படை ஒருசிறந்த அமைப்பாக திகழ்வதாக பிரதமர் கூறினார்.
இதுபோன்ற மாண்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவிடம் மூன்றுமுறை போரில் தோற்றுப்போன பாகிஸ்தான், மறைமுகப் போரில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் பிரதமர் சாடினார்.
30 ஆண்டுகளுக்கு மேல் இந்திய விமானப்படைக்கு நவீன விமானம் எதுவும் வாங்கப்படாமல் இருந்தது என்று சுட்டிக்காட்டிய மோடி, தற்போது இந்தியாவிடம் அடுத்த தலைமுறைக்கான ரபேல் போர் விமானம் இருப்பதாக பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
வரலாற்று அநீதியை சரிசெய்வதற்காகவும், பாஜகவின் பழைய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவும், குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
Comments