Password-களில் இதை செய்தால் போதும்.. ஹேக்கர்களிடமிருந்து எளிதில் தப்பிக்கலாம்
இன்று அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், வளரும் தொழிநுட்பங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் உள்ள அதிலும் பணம் தொடர்பான சைபர் குற்றங்கள் அதிகரிக்க நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம்.
சைபர் குற்றங்கள் நிகழ நாம் எப்படி காரணம் என்று கேட்டால் அதற்கு உரிய எளிய பதில் நமது அஜாக்கிரதை தான். நம் அலட்சியத்தால் நடக்கும் சைபர் குற்றங்களில் இருந்தது நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
களவாடும் சைபர் திருடர்கள்:
சைபர் தாக்குதல் என்பது தகவல் திருட்டிற்காக தனிப்பட்ட நிறுவனங்கள் மீது மட்டும் நிகழ்த்தப்படுவது இல்லை. அன்றாடம் உழைத்து களைக்கும் சராசரி மனிதர்கள் மீது பணத்திற்காக ஏதாவதொரு வகையில் நிகழ்த்தப்படுகிறது. திடீரென்று ஒருவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.5,000 காணாமல் போயிருக்கும். இது மாதிரி சிறிய தொகை முதல் லட்சக்கணக்கிலான பணம் வரை, சைபர் குற்றங்களால் அபேஸ் செய்யப்படுகிறது. வியர்வை சிந்தி உழைத்த பலரின் பணத்தை, எங்கோ ஒரு மூலையில் கணினியும் கையுமாக உட்கார்ந்து கொண்டு நொடியில் களவாடிவிடுகிறர்கள் சைபர் திருடர்கள்.
தகவல் பாதுகாப்பே முக்கியம்:
ஆன்லைன் வர்த்தகம் ஆலமரம் போல வளர்ந்து விட்ட நிலையில் அதிரடி சலுகை தரும் காலங்களில் டிஜிட்டல் பேமெண்ட் மூலம் பணம் செலுத்தினால் கூடுதல் சலுகையும் தருகின்றனர் ஆன்லைன் விற்பனையாளர்கள். இதற்கு ஆசைப்பட்டும், வங்கிக்கு செல்லாமல் பிறர் கணக்கிற்கு எளிதாக நொடியில் பணம் மற்ற விரும்பியும் ஏராளமான ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து கொள்கிறோம். டிஜிட்டல் உலகிற்கு நாம் செல்வது முக்கியமில்லை, அங்கு நமது தகவல்களை எவ்வாறு பாதுகாத்து கொள்கிறோம் என்பதே முக்கியம்.
பாஸ்வோர்ட்டின் முக்கியத்துவம்:
சைபர் கிரைமின் அடிப்படையே கடவுச்சொல்லை ஆட்டம் காண செய்வது தான். அப்படிப்பட்ட கடவுச்சொல்லை நம்மில் பலர் கறிவேப்பில்லை போல பயன்படுத்தி வருகிறோம் என்பதே கசப்பான உண்மை. உங்கள் தகவல்கள் மற்றும் பணத்தை சைபர் கிரிமினல்களிடமிருந்து பாதுகாத்து கொள்ள விரும்பினால் கடவுச்சொல்லை மிக வலுவாக கட்டமைப்பது முக்கியம். ஆனால் பலரும் தங்களது பல பாஸ்வோர்டுகளை பிறர் கணிக்கும் வகையில் எளிதாகவே வைத்துள்ளனர்.
வலுவான பாஸ்வோர்ட்..?
எண்கள், குறியீடுகள் மற்றும் எழுத்துக்களை கொண்டு சிக்கலான மற்றும் யாரும் எளிதில் கணிக்க முடியாத வகையில் உருவாக்குவதே ஸ்ட்ரங்கான பாஸ்வேர்ட் எனலாம்.
ரிப்பீட் செய்யாதீர்கள்:
பலரும் பல்வேறு வங்கி கணக்குகளின் இன்டர்நெட் பேங்கிங்கிற்கு ஒரே பாஸ்வோர்ட்டை தொடர்ந்து பயன்படுத்துவர். இப்படி ஒரே பாஸ்வோர்ட்டை பயன்படுத்துவது சைபர் திருடர்களின் வேலையே எளிதாக்கிவிடும். எனவே பல்வேறு வங்கி கணக்குகள் மற்றும் பேமெண்ட் ஆஃப்ஸ்கள் வைத்திருந்தாலும் அனைத்திற்கும் வேறு வேறு வலுவான பாஸ்வேர்ட்களை பயன்படுத்துங்கள்.
நமக்கு ஈஸி.. ஹேக்கர்களுக்கு ரொம்ப ஈஸி:
நமக்கு ஈஸியாக மனதில் நிற்க நாம் பயன்படுத்தும் எளிய பாஸ்வோர்ட்கள், ஹேக்கர்ஸ் எனப்படும் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் திருட்டு வேலைகளில் ஈடுபட அதைவிட மிக எளிதாக அனுமதிக்கிறோம் என்பதே நிதர்சனம். எனவே எளிதான பாஸ்வோர்ட்களையே செட் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு நமக்கே சவாலான பாஸ்வோர்ட்களை செட் செய்யலாம். அப்படிப்பட்ட சவாலான பாஸ்வோர்ட்களை செட் செய்த பின்னர், அவரவர் தனிப்பட்ட டைரியில் மறக்காமல் எழுதி வைத்து கொண்டால் நல்லது.
இந்த லிஸ்டில் நீங்கள் உண்டா..
123456, 123456789, qwerty, password, 1234567, 12345678, 12345, iloveyou, 111111, 123123. இதெல்லாம் கடந்த ஆண்டு உலக அளவில் பயன்படுத்தப்பட்ட மோசமான, ஹேக்கர்கள் மிக எளிதில் தட்டி தூக்க கூடிய பாஸ்வோர்ட்கள். இது மாதிரியான பாஸ்வோர்ட்களை இது வரை பயன்படுத்தி இருந்தால் பரவாயில்லை. இனிமேலும் இவற்றை பயன்படுத்தாதீர்கள்.
தேதி, வருடம்:
அதேபோல பிறந்த தேதி, வருடம், மாதம், திருமண நாள், குழந்தைகளின் பிறந்த தினம் உள்ளிட்டவற்றை கடவுச்சொல்லாக பயன்படுத்துவதை தவிர்த்தல் நலம். மின்னஞ்சல், வங்கி மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற உங்கள் முக்கியமான கணக்குகளுக்கு குறைந்தபட்சம் வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வோர்ட்களை உருவாக்கி கொள்ளுங்கள்.
செயலிகளை பயன்படுத்தலாம்:
ஒவ்வொருவரும் இ மெயில் துவங்கி ஆன்லைன் இணையதளங்கள், வங்கி கணக்குகள் வரை பலவற்றை வைத்திருக்கிறோம். இவை ஒவ்வொன்றிற்கும் வலுவான பாஸ்வோர்ட்களை கொடுத்து நினைவு வைப்பது கடினமே. இதற்கென்று பிரத்யேகமாக பல அதிகாரப்பூர்வ செயலிகள் உள்ளன. அவற்றை பதிவிறக்கம் செய்து அதில் குறித்து வைக்கலாம். அல்லது கூகுள் பாஸ்வோர்ட் மேனேஜ்மென்ட் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.
Comments