இளம் பெண் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்த நபர் கைது
கோவையில் திருமணத்துக்கு மறுத்ததால் இளம் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து, சமூக வளைத்தில் வெளியிட்டதுடன், அப்பெண்ணின் சகோதரிக்கும் அனுப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு தம்பதி வந்து புகார் அளித்தனர். அதில், தங்களது 23 வயது மகளுடன், ரூபன் என்பவர் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்து, பின்னர் மார்பிங் செய்து இணைய தளத்திலும், பெண்ணின் தங்கைக்கு வாட்ஸ் அப்பிலும் அனுப்பி இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.
இதுபற்றி போலீசார் விசாரித்ததில், கோத்தாரி லே அவுட்டைச்சேர்ந்த கட்டிட காண்டிராக்டரான ரூபன், அப்பெண்ணுடன் நட்பாக பழகி வந்த நிலையில், அவருடன் வெளியே சென்றபோது, நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
பின்னர் திருமண ஆசை கூறி உடல் ரீதியாக இச்சைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு மறுத்ததால், புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, தகவல் தொழில் நுட்ப சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிந்து ரூபன் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே பிறருடன் நட்பாக பழகும் இளம்பெண்கள், எச்சரிக்கையுடன் இருந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்க்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments