சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை வளாகம்

0 3607

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை வளாகத்தையும்,  ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மொத்தம் 42 கோடி ரூபாய் மதிப்பிலான புற்று நோய் சிகிச்சைக்கான லீனியர் ஆக்சலரேட்டர் கருவிகள், சி.டி.சிமுலேட்டர் கருவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 6 கோடி ரூபாய் மதிப்பில் கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. கதிரியக்கம் வெளியேறாத வகையில் 4 அடி தடிமனில் அங்கு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு 22 கோடி ரூபாய் மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை கருவிகளான லீனியர் ஆக்சலரேட்டர், சி.டி. சிமுலேட்டர் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, அந்த கருவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

இதேபோல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 20 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள லீனியர் ஆக்சலரேட்டர் கருவியை காணொலி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

புற்றுநோயாளிகளுக்கு புற்றுநோய் தாக்கம் இருக்கும் பகுதியில் கதிர்வீச்சை செலுத்தி சிகிச்சை அளிக்கையில் பிற உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு பிற உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, புற்றுநோய் பாதிப்பு பகுதியில் மட்டும் மிக துல்லியமாக லீனியர் ஆக்சலரேட்டர் கருவியால் கதிர்வீச்சை செலுத்த முடியும். இந்த சிகிச்சைக்கு சி.டி.சிமுலேட்டர் என்ற துணை கருவியும் அவசியமாகும்.

லீனியர் ஆக்சலரேட்டர் கருவியின் விலை மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் என்பதால், அவற்றை வாங்க தனியார் மருத்துவமனைகளே தயக்கம் காட்டி வருகின்றன. தனியார் மருத்துவமனையில் பல லட்ச ரூபாய் செலவில் பெறக்கூடிய புற்றுநோய்க்கான சிகிச்சை, அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

ஓமந்தூரார், ராயப்பேட்டை மருத்துவமனைகளை தொடர்ந்து இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதியுடன் மேலும் 9 இடங்களில் 190 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய, மாநில பங்களிப்புடன் அமைக்கப்பட இருக்கின்றன.

காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, கோவை, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி, சேலம் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் விரைவில் இந்த கருவிகள் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் அக்கருவியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments