டூவீலருக்கு சீட் பெல்ட் அபராதம்..! சீரியஸ் போலீஸ்

0 1384

சென்னை கொடுங்கையூரில் இரு சக்கர வாகனத்தில் சென்றவரிடம், சீட் பெல்ட் அணியவில்லை என்று 100 ரூபாய் அபராதம் விதித்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் சிவா என்பவர் தான் இரு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக கொடுங்கையூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலமணியின் ஞான திருஷ்டியால் அபராத விதிப்புக்கு இலக்கானவர்..!

 அப்பாச்சி பைக் ஒன்றை கடனில் வாங்கிய ஆசிரியர் சிவா, அதற்கு மாதம் தோறும் முறையாக தவணை செலுத்தி முழுத்தொகையும் கட்டி முடித்துள்ளார். இதையடுத்து தனது வாகனத்திற்கு தடையில்லா சான்று பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றுள்ளார்.

அப்போது கடந்த 17ந்தேதி சென்னை கொடுங்கையூரில் சீட் பெல்ட் அணியாமல் சிவா இரு சக்கர வாகனம் ஓட்டிச்சென்றதாக கொடுங்கையூர் காவல் உதவி ஆய்வாளர் பாலமணி என்பவர் இ- சலான் மூலம் அபராதம் விதித்துள்ளதாகவும் அதனை செலுத்தினால் மட்டுமே என்.ஓ.சி தர இயலும் என்று அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர்.

17ந்தேதி ஊரில் இல்லாத நிலையில் இரு சக்கர வாகனத்திற்கு சீட் பெல்ட் அணியவில்லை என்ற அபத்தமான அபராத ரசீதிற்கு ஆன்லைனில் அபராதம் செலுத்திய பின்னரே தனது வாகனத்திற்கு என்.ஓ.சி கிடைத்ததாக தெரிவித்தார் சிவா

இது வேடிக்கையாகவோ, வினோதமாகமோ தெரிந்தாலும் இந்த விவகாரத்தில் இ - சலான் மூலம் அபராதம் விதித்து 100 ரூபாய் கட்டணத்தையும் வசூலிக்க காரணமான ஆர்.எஸ்.ஐ பாலமணி மீது குறைந்தபட்சம் துறை ரீதியான நடவடிக்கையாவது எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

கணக்கிற்காக கண்ணில் பட்ட வாகனத்திற்கு எல்லாம் இ-சலான் முறையில் அபராதம் விதிக்கும் பாலமணியை போன்ற பொறுப்பற்ற அதிகாரியால், கடமை உணர்வுமிக்க காவல்துறைக்கு களங்கமாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments