குரூப் 4 தேர்வு முறைகேடு.. மேலும் 3 பேர் கைது..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இடைத்தரகர் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல் வெளியான போது இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய தேர்வர்கள் அதிக அளவில் முதல் 100 இடங்களுக்குள் வந்திருந்தனர். இதையடுத்து அந்த முறைகேடு தொடர்பான புகாரின்பேரில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுவரை வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், முறைகேடாக தேர்வு எழுதிய தேர்வர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டம் வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கார்த்தி, ஆவடி அருகில் உள்ள ஏகாம்பர சத்திரத்தை சேர்ந்த வினோத்குமார் மற்றும் கடலூர் மாவட்டம் சிறு கிராமத்தை சேர்ந்த சீனுவாசன் ஆகியோர் இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்து முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் சீனுவாசன் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டு மேலும் 4 நபர்களிடம் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் பெற்று முறைகேடாக தேர்வு எழுத உதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து புலன்விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், அரசு ஊழியர்களான பள்ளிக்கல்வித் துறை ஊழியர் ரமேஷ், எரிசக்தி துறை ஊழியர் திருக்குமரன், டிஎன்பிஎஸ்சி அலுவலக ஊழியர் ஓம் காந்தன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே சர்வதேச சுங்க தினத்தை ஒட்டி சென்னை சுங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குரூப்-4 முறைகேடு தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சி மையங்கள் புற்றீசல் போல் வளர்ந்துவிட்டதாகவும், முறைகேட்டில் ஈடுபடும் மையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்கவும் உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்கவும் உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிடப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் தரப்பில், அவரது வழக்கறிஞர் நீலமேகம் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் இந்த முறையீட்டை முன்வைத்தனர். அப்போது, சீருடை பணியாளர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளதால் காவல்துறையின் சிபிசிஐடி விசாரிக்கும்போது உண்மை நிலை வெளி வராது என்று கூறப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களில் தொழில்நுட்ப ரீதியாகவும், தேசிய நெடுஞ்சாலையில் வைத்தும் இந்த முறைகேடு நடந்துள்ளதாக வழக்கறிஞர் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Comments