சட்டவிரோத பேனர்கள் குறித்து அதிமுக, திமுக தவிர்த்து பிற கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சட்டவிரோத பேனர்கள் வைக்க மாட்டோம் என திமுக மற்றும் அதிமுக தவிர மற்ற அரசியல் கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானது தொடர்பான வழக்கு உள்ளிட்ட வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக பேனர்கள் வைப்பது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளதாகவும், சுபஸ்ரீ வழக்கில் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சுபஸ்ரீ மரணத்திற்கு முன் சட்டவிரோதமாக பேனர் வைத்தது தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளின் நிலை என்ன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேபோல அரசியல் கட்சியினர் தொண்டர்களுக்கு பேனர் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய பிறப்பித்த உத்தரவின்படி திமுக மற்றும் அதிமுக சார்பில் தான் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பிற கட்சிகள் ஏன் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.
சட்டவிதிகளை பின்பற்றி பேனர்கள் வைக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களின் மீது முடிவெடுப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால், மாநகராட்சி துணை ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர்.
பின்னர், அரசு செலவில் லட்சக்கணக்கான ரூபாய் விளம்பரங்களுக்காக செலவிடுவது தொடர்பான வழக்கில், பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுப்பது தொடர்பான கொள்கை ஏதேனும் வகுக்கப்பட்டுள்ளதா என பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து, அனைத்து வழக்குகளின் விசாரணையை நீதிபதிகள், பிப்ரவரி 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Comments