தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்க கோரி முறையீடு
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தொல்லியல் துறை அனுமதி பெறாமல் நடைபெறுவதாகவும், கும்பாபிஷேகத்துக்கு தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில், வழக்கறிஞர் சரவணன் என்பவர் தரப்பில் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக முறையிடப்பட்டது. தஞ்சை பெரியகோவில் பாதுகாக்கப்பட்ட புராதனச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கோவில் தொல்லியல் துறையின் பராமரிப்பிலும், கட்டுப்பாட்டிலும் இருப்பதாகவும் முறையீட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், கும்பாபிஷேகத்துக்கு தடை விதிக்குமாறும் கோரப்பட்டது. அப்போது மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மைலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் இந்துக் கோவிலான தஞ்சை பெரிய கோவிலில் தேவ மொழியான சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகத்தை நடத்த உத்தரவிடுமாறும், அவசர வழக்காக விசாரிக்கவும் கோரப்பட்டது.
தமிழ்தேச பொதுவுடைமை கட்சித் தலைவர் மணியரசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிடவும் அவசர மனுவாக விசாரிக்கவும் கோரப்பட்டது.
இந்நிலையில் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்குகளை நாளை பட்டியலிடுமாறு அரசு தரப்பில் கோரப்பட்டது.
குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிடக் கோரி ஏற்கனவே கடந்த வாரம் இரண்டு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments