கைதான 3 அரசு ஊழியர்கள் பணியிடைநீக்கம்..!
குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, தொடர்ந்து 4வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் ரெக்கார்டு கிளர்க்காக பணிபுரியும் ஓம்காந்தன் மற்றும் பாலசுந்தர்ராஜ் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஓம்காந்தனிடம் மேற்கொண்ட விசாரணையில் இராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விடைத்தாள் கட்டுகளை கொண்டு வந்த போது ஜெயக்குமார் என்பவனுக்கு, விடைத்தாள் கட்டுகளை மாற்றி வைக்க உதவியது தெரிய வந்தது. விசாரணைக்கு பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், 12 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ரமேஷ், எரிசக்தி துறையில் பணியாற்றும் திருக்குமரன், டிஎன்பிஎஸ்சி அலுவலக ஊழியர் ஓம் காந்தன் ஆகியோரும் அடங்குவர்.
இந்நிலையில் அரசு ஊழியர்களான அவர்கள் மூவரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக, விழுப்புரத்தை சேர்ந்த ஒருவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே சர்வதேச சுங்க தினத்தை ஒட்டி சென்னை சுங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது குரூப்-4 முறைகேடு தொடர்பாக பேசிய அவர், தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையங்கள் புற்றீசல் போல் வளர்ந்துவிட்டதாகவும், முறைகேட்டில் ஈடுபடும் மையங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Comments