உள்ளாட்சித் தேர்தல் பகை - சதித்திட்டம் தீட்டிய கும்பல் கைது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளாட்சித் தேர்தல் முன்பகை தொடர்பாக சதித்திட்டம் தீட்டியவர்களை கைது செய்து ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களை வழக்கிலிருந்து தப்பிக்கவைக்க முயற்சித்ததாக கமுதி பொறுப்பு காவல் ஆய்வாளரை பணியிடைநீக்கம் செய்ய எஸ்.பி பரிந்துரைத்துள்ளார்.
கோவிலாங்குளம் அருகே உள்ள தோப்படைபட்டி கிராமத்தில் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாகவும், துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி அங்கு சென்று கடந்த 6 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், திருமேனி அம்மன்கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் கூடி பேசிக்கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஓ.கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ராஜாமணி என்பவரும், பாண்டி என்பவரும் போட்டியிட்டதில் ராஜாமணி வெற்றி பெற்றுள்ளார். அவர் முறைகேடாக வெற்றி பெற்றதாகக் கூறி பாண்டி வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜாமணியின் தாயார் செல்வமேரி, பாண்டியை கொலை செய்ய ஏற்பாடு செய்த ஆட்களைத்தான் போலீசார் மடக்கிப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் மண்ணில் புதைத்து வைத்திருந்த ஒரு ஒற்றைக்குழல் துப்பாக்கி, துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் இரும்புக்குழல், 2 பெரிய அரிவாள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி செல்வமேரியையும் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கமுதி காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் கஜேந்திரன் என்பவர், போலீசார் விசாரிக்க வருவது குறித்து முன்கூட்டியே செல்வமேரி தரப்புக்கு தகவல் கொடுத்ததாகவும் அதனால் உஷாரான செல்வமேரி, தன்னை போலீசார் துன்புறுத்துவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொய்ப் புகாரளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பிடிபட்ட நபர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செல்வமேரி கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து பொறுப்பு ஆய்வாளர் கஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்ய இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி ரூபீஸ் மீனாவிற்கு மாவட்ட எஸ்.பி வருண்குமார் பரிந்துரை செய்துள்ளார்.
Comments