இந்தியாவில் 'கொரோனா' அறிகுறிகளுடன் 2 பேர்..!

0 1710

சீனாவில் 80 பேர் உயிரிழக்க காரணமான கொரோனாவைரஸ் தொற்று, இந்தியாவில், 2 பேருக்கு பரவி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த இரண்டு பேரில் ஒருவர் ஜெய்பூரிலும் மற்றவர் பாட்னாவிலும் கொரோனா அறிகுறிகளுடன் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் ஒருவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து எல்லையில் தீவிரமான கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் எம்.பி.பி.எஸ். முடித்து விட்டு ராஜஸ்தான் திரும்பிய மருத்துவ மாணவர் ஒருவருக்கு நோய் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஜெய்பூர் எஸ்.எம்.எஸ். மருத்துவக் கல்லூரி தனி வார்டில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதார அமைச்சர் ரகு சர்மா இன்று தெரிவித்தார். அதே போன்று சீனாவில் இருந்து பீகாருக்கு திரும்பி வந்த ஏக்தா என்ற பெண்ணுக்கும் கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதை அடுத்து அவர் பாட்னா மருத்துவக் கல்லூரியில் தனி வார்டில் வைக்கப்பட்டுள்ளார்.

அதே சமயம், கொரோனாவைரஸ் தாக்குதல் ஆரம்பித்த பிறகு இந்தியாவுக்கு சீனாவில் இருந்து 137 விமானங்களில் வந்த 29 ஆயிரத்து 700 க்கும் அதிகமான பயணிகளை சோதித்ததில் யாருக்கும் நோய் அறிகுறிகள் காணப்படவில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

எனினும் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் 100 க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நேபாளத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அதை ஒட்டிய எல்லை மாவட்டங்களில் மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டு நிலைமை உன்னிப்புடன் கவனிக்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில் கொரோனா தாக்குதலின் பின்னணியில், புத்தாண்டு விடுமுறையை அடுத்த மாதம் 2 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக சீன அரசு இன்று அறிவித்துள்ளது. தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், வைரஸ் தாக்குதல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றும் அது தெரிவித்திருக்கிறது.

சுமார் 2 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்தில் 8 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹாங்காங், அமெரிக்காவில் தலா 5 பேரும், தைவான் சிங்கப்பூரில் தலா 3 பேரும், மெக்காவ், ஜப்பான், தென் கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் தலா 2 பேரும், பிரான்சு மற்றும் நேபாளத்தில் தலா ஒருவரும் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.


இதனிடையே கொரோனாவைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில், திபெத்தில் உள்ள தலாய்லாமாவின் அதிகாரப்பூர்வ இல்லமான பொட்டாலா அரண்மனை (Potala Palace) இன்று முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக சீன அரசு அறிவித்துள்ளது.

அதே போன்று ஷென்ஜென் (Shenzhen) துறைமுகத்திற்கு வந்த கோஸ்டா வெனீசியா (Costa Venezia) என்ற சொகுசு கப்பல் அங்கு தனியிடத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 5ஆயிரம் சுற்றுலாப் பயணிகளுடன் வந்த இந்த கப்பலில் இருக்கும் சுமார் 150 பேர் கொரோனாவைரஸ் பரவிய ஹுபேய் (Hubei) மாகாணத்திற்கு சென்று வந்தவர்கள் என்பதால், கப்பலில் உள்ள அனைவரும் நோய்தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேருக்கு நோய் தொற்று அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments