இசைத்துறையினருக்கு கிராமி விருதுகள் வழங்கும் விழா...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்ற 62வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில், புதுமுகப் பாடகி பில்லி எல்லிஷ் 5 கிராமி விருதுகளை தட்டிச் சென்றார்.
சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 62வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது. 15 முறை கிராமி விருதினை வென்றவரான அலிசியா கீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவின் துவக்கத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட்டுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிவப்பு கம்பளத்தில் அணிவகுத்து வந்த பிரபலங்கள், புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தனர்.
நடப்பாண்டில் அதிகபட்சமாக 8 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த பாடகி லிசோ, ட்ரூத் ஹர்ட்ஸ் எனும் பாடலுக்காக சிறந்த பாப் சோலோ பெர்பார்மன்ஸ் உள்ளிட்ட 3 பிரிவுகளில் விருதுகளை வென்றார். அவருக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக 6 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த புதுமுகப் பாடகி பில்லி எல்லிஷ், சிறந்த ஆல்பம், சிறந்த பாடல், சிறந்த புதுமுக பாடகி, சிறந்த பாப் குரல் ஆல்பம், ரெக்கார்டு ஆப் தி இயர் ஆகிய பிரிவுகளில் விருதுகளை தட்டிச் சென்றார்.
பிகமிங் (‘Becoming’)என்ற பெயரில் தனது சுயசரிதையை ஒலிப்புத்தகமாக வெளியிட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவுக்கு, "பெஸ்ட் ஸ்போக்கன் வேர்டு" என்ற பிரிவில் கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற பாடகியான லேடி காகா, விசுவல் மீடியாவில் சிறந்த பாடலை எழுதியதற்காக கிராமி விருதை பெற்றுள்ளார். கடந்த ஆண்டும் இதே பிரிவிலும், சிறந்த பாப் இரட்டையர் மற்றும் குழு பெர்பார்மன்சுக்கான கிராமி விருதுகளை வென்றவரான லேடி காகா, இம்முறை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
Comments