ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் விற்க முடிவு..!
ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளையும் இந்திய தனியார் நிறுவனங்களுக்கு விற்று விட முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்கான விருப்பத்தை நிறுவனங்கள் தெரிவிக்க, வரும் மார்ச் மாதம் 17 ஆம் தேதியை கெடுவாக அறிவித்துள்ளது.
தினசரி 20 முதல் 25 கோடி ரூபாய் வரை இழப்புடன் இயங்கி வரும் ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்று விட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதை வாங்க நினைக்கும் நிறுவனங்கள் வரும் மார்ச் 17 ஆம் தேதிக்குள் விருப்ப விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தன் வசம் உள்ள ஏர் இந்தியாவின் பங்குகளில் 76 சதவிகிதத்தை தனியாருக்கு விற்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் அதற்கு யாரும் ஆர்வம் காட்டாததை தொடர்ந்து 100 சதவிகித பங்குகளையும் விற்று விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவுக்கு இருக்கும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளிட்ட இதர சுமைகளையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் எந்த அறிவிப்பும் சேர்ந்து வெளியாகி இருப்பதால், ஏர் இந்தியாவை வாங்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஏர் இந்தியாவை வாங்க டாடா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம் இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதால், சில வெளிநாட்டு விமான நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ஏர் இந்தியாவை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் மட்டும் ஏர் இந்தியாவுக்கு 25 ஆயிரத்து 509 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கும் ஏர் இந்தியாவுக்கு தொடர்ந்து நிதிஉதவி அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ள மத்திய அரசு, இந்த இரண்டாவது விற்பனை அறிவிப்பும் பலனளிக்கவில்லை என்றால், அதை நிரந்தரமாக இழுத்து மூட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Comments