குடியரசு தின அணிவகுப்பில் முதன் முறையாக இடம் பெற்ற பல அம்சங்கள்
நாட்டின் 71-வது குடியரசு தின விழா மற்றும் அணிவகுப்பில் முதன் முறையாக இடம்பெற்ற பல்வேறு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்....
குடியரசு தினத்தின்போது, பிரதமர்கள் டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்துவதுதான் வழக்கம். இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி குடியரசு தினத்தை முன்னிட்டு முதன் முறையாக மரியாதை செலுத்தினார்.
சிறிது நேரம் மவுனம் அனுசரித்து, மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில், முதன் முறையாகவும் முக்கிய சிறப்பம்சமாகவும் செயற்கைக் கோள் முறியடிப்பு சாதனமான மிஷன் சக்தி இடம் பெற்றது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்ட மிஷன் சக்தி, நாட்டுக்கு எதிரான செயற்கைக் கோள்களை வீழ்த்துவதில் நாட்டின் திறனை நிரூபிக்கும் முக்கிய முன்னேற்றமாகும்.
இதேபோல அணிவகுப்பில் தனுஷ் வகை துப்பாக்கிகள் முதன் முறையாக இடம் பெற்றன. உள்நாட்டிலேயே ராணுவ தளவாட தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தனுஷ் வகை தானியங்கி துப்பாக்கிகள் 36.5 கிலோமீட்டர் தூரம் வரையான இலக்குகளை தாக்க வல்லவை.
முதன் முறையாக பெண் அதிகாரியான கேப்டன் தன்யா செர்ஜில் என்பவர் அனைத்து ஆண்கள் அணிவகுப்புப் பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கினார்.
ஜம்மு காஷ்மீர் முதன் முறையாக இந்த ஆண்டு குடியரசு தின அணி வகுப்பில் யூனியன் பிரதேசமாக பங்கேற்றது.
அணிவகுப்பில் முதல் முறையாக சி.ஆர்.பி.எஃப். வீராங்கனைகள் இரு சக்கர வாகனங்களில் நிகழ்த்திக் காட்டிய சாகசங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.
இதேபோன்று அணி வகுப்பில் முதன் முறையாக திரிசூல வடிவில் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் அணிவகுத்தன.
Comments