குரூப் - 4 முறைகேடு.. இருவர் கைது.. முக்கிய குற்றவாளிக்கு வலை..!
குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி ஊழியர் உள்ளிட்ட மேலும் இருவரை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஜெயக்குமார் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடலூர், சிவகங்கை, தஞ்சை, நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இடைத் தரகர்கள், முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் என தற்போதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கீழக்கரை வட்டாட்சியர் வீரராஜ், ராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி ஆகியோர் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் ரெக்கார்ட் கிளர்க்காக பணிபுரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஓம்காந்தன் என்பவரை கைது செய்துள்ள சிபிசிஐடி போலீசார், அவரது வீட்டில் சோதனை நடத்தி 2 செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட ஓம் காந்த் மற்றும் பாலசுந்தர் ஆகியோர் விசாரணைக்கு பின்பு எழும்பூரில் நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஆறாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இரண்டு பேருக்கும் பிப்ரவரி ஏழாம் தேதி வரை 12 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Comments