குடியரசு தின விழா கொண்டாட்டம்..!
நாட்டின் 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரமாண்ட அணிவகுப்பைப் பார்வையிட்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குதிரைப்படை அணி வகுக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சிறப்பு விருந்தினரான பிரேசில் அதிபர் போல்சொனாரோ ஆகியோர் கொண்டாட்டங்கள் நடைபெற்ற ராஜ்பாதைக்கு வந்தனர். அவர்களை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.இதனைத் தொடர்ந்து நாட்டின் வலிமையைப் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற முப்படைகளின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டார். அணி வகுப்பில் டி 90 பீஷ்மா, கே 9 வஜ்ரா டி ரக பீரங்கிகள் இடம் பெற்றன.
புதிதாக படையில் இணைக்கப்பட்டிருக்கும் சினூக், அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் அணிவகுப்பில் இடம் பெற்றன.
ஆகாஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் பங்கேற்றன.
பல்வேறு படைப் பிரிவுகளின் அணிவகுப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தன. எல்லைப் பாதுகாப்புப் படை சார்பில் பாலைவனப் பகுதிகளில் எல்லையைப் பாதுகாக்கும் ஒட்டகப் படை இடம் பெற்றது.
தமிழகக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் காவல் தெய்வமான ஐயனார் சிலை மற்றும் பல்வேறு கிராமிய நடனங்களுடன் வந்த அலங்கார ஊர்தி பார்வையாளர்களைக் கவர்ந்தது.
மத்திய பொதுப்பணித்துறை அலங்கார ஊர்தியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்ற தலைப்பில் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம், காஷ்மீரின் தால் ஏரி உள்ளிட்டவற்றைக் கொண்ட அலங்கார ஊர்தி இடம்பெற்றது.
தெலுங்கானாவின் பதுக்கம்மா மலர்த் திருவிழா, பூரி ஜெகந்நாத தேரோட்டம், ராஜஸ்தானின் கட்டிடக் கலைச் சிறப்பு அசாம் மூங்கில் கலை, இமாச்சலப் பிரதேசத்தின் தசரா விழா உள்ளிட்டவை சார்ந்த அலங்கார ஊர்திகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உத்தரப்பிரதேசம் பஞ்சாப், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் 16 ஊர்திகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்கள் துறைகள் சார்ந்த ஊர்திகள் என மொத்தம் 22 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம் பெற்றன.
அணி வகுப்பில் இடம் பெற்ற பல்வேறு மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களைக் கவர்ந்தனவிமானப்படையின் வலிமையை பறைசாற்றும் வகையில் இந்திய விமானப் படையின் பிரமாண்ட அணிவகுப்புடன் குடியரசு தின விழா அணிவகுப்பு நிறைவடைந்தது. சுகோய், ஜாகுவார், டோர்னியர் உள்ளிட்ட வகை விமானங்கள் வானில் அணிவகுத்தன.
Comments