சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்... கொடியேற்றினார் ஆளுநர்..!
நாட்டின் 71ஆவது குடியரசு தினத்தையொட்டி, சென்னையில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக் கொண்டார்.
71ஆவது குடியரசு தினம், நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காலை 7.30 மணிக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வந்தார். அப்போது அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து, 8 மணியளவில் தேசிய கீதம் முழங்க தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றினார். அப்போது ஹெலிகாப்டர் மூலம், தேசியக் கொடி மீது மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழக காவல்படை, மத்திய காவல்படை, குதிரைபடை, கடலோர காவல்படை உள்ளிட்ட பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதை ஆளுநர் புரோஹித் பார்வையிட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி-கல்லூரி மாணவிகளின் கண்கவர் நடன கலைநிகழ்ச்சிகளும், தேசிய ஒருமைபாட்டை விளக்கும் வகையிலான பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை, காவல்துறை, வேளாண் மற்றும் தோட்ட கலைத்துறை, பள்ளி கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 16 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.
இந்த கலைநிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்பை ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் நேரில் கண்டுகளித்தனர்.
Comments