முகநூல் காதல் முரட்டு சிங்கிளும் திருட்டு பாய்ஸும்..! பெண் குரலால் மயக்கி வழிப்பறி
ஈரோட்டை சேர்ந்த 36 வயது இளைஞருடன் முகநூலில் பெண் பெயரில் போலியான கணக்கில் பழகி மயக்கிய சிறுவன் ஒருவன், செல்போனில் பெண்குரலில் பேசி, இளைஞரை சென்னைக்கு வரவழைத்து கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு போலீசில் சிக்கி உள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவர் தான் முகநூல் காதலியை சந்திக்கும் ஆவலில் வந்து திருட்டு பாய்ஸ்சிடம் சிக்கிய முரட்டு சிங்கிள்..!
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெண் பெயரில் இயங்கிய முகநூல் கணக்கிற்கு நட்பு அழைப்பு விடுத்த சண்முகசுந்தரத்திற்கு, அந்த பெண் ஏற்பு தகவல் தெரிவித்ததும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார். தினமும் அந்த பெண்ணுடன் முகநூலில் மூழ்கி கிடந்த சண்முக சுந்தரம். அந்த பெண் அனுப்பிய புகைப்படங்களை கண்டு அழகில் மயங்கினார்.
ஒரு கட்டத்தில் செல்போன் நம்பரை பெற்று தொடர்பு கொண்டபோது, மெல்லிய குரலில் பேசிய அந்த பெண்ணின் வார்த்தைகளில் சொக்கிப் போனார் சண்முக சுந்தரம். தினமும் போனில் மணிக்கணக்கில் பேசி வந்த சண்முகசுந்தரத்திற்கு தனது முகநூல் காதலியை சந்திக்கும் ஆவல் ஏற்பட்டது.
தான் வீட்டில் தனியாக இருப்பதாகக் கூறி காதலி அழைப்பு விடுக்க, காதலியை தனிமையில் சந்திக்கும் ஆவலில் முரட்டு சிங்கிள் சண்முக சுந்தரம், முகத்தை கிளீன் சேவ் செய்து விட்டு புது மாப்பிள்ளை போல புயலாகப் புறப்பட்டு சென்னை வந்தார்.
செல்போனில் தனது காதலியை தொடர்பு கொண்ட போது, கோயம்பேட்டில் இருந்து மாதவரம் பேருந்து நிலையத்துக்கு வரச் சொன்ன காதலி, அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் தனியாக நிற்கச் சொல்லிவிட்டு தான் வருவதாக கூறியுள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் 5 புள்ளிங்கோக்கள் சண்முக சுந்தரத்தை மடக்கி பிடித்து கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் பணம், தங்கசங்கிலி, மோதிரம், ஸ்மார்ட் போன் போன்றவற்றை பறித்துக் கொண்டனர். அவரிடம் ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை பெற்று ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுக்கச் சென்றுள்ளனர்.
3 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்ட நிலையில், இருவர் சண்முக சுந்தரத்தை மடக்கி வைத்திருந்தனர் அப்போது ரோந்து வந்த போலீசாரைக் கண்டு சண்முக சுந்தரம் அபயக்குரல் எழுப்பியுள்ளார். சண்முக சுந்தரத்தை மீட்ட போலீசார் இரு புள்ளீங்கோக்களை கைது செய்தனர். பணம் எடுக்க சென்ற 3 பேரும் போலீசாரைக் கண்டதும் தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகின்றது.
போலீசாரின் விசாரணையில், முக நூலில் பெண்களுடன் பழகும் ஆசையில் பிரெண்டு ரெக்வஸ்ட் கொடுக்கும் நபர்களிடம், பெண்கள் போல இயங்கும் பேக் ஐடியில் சபலத்தைத் தூண்டும் யுவராஜ், சதீஷ், ஆதி, நவீன்குமார் ஆகிய 4 பேரும் 17 வயது சிறுவனை பெண் போல பேசவைத்து சென்னைக்கு அழைத்து வழிப்பறி செய்து வந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக நவீன்குமார் மற்றும் பெண் குரலில் பேசிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசிடம் தப்பிச்சென்ற யுவராஜ், சதீஷ், ஆதி ஆகிய 3 பேரில் யுவராஜ் மற்றும் சதீஷ் ஆகியோர் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய ஆதியை போலீசார் தேடி வருகின்றனர்.
முகம் தெரிந்து காதலித்தாலே முடிவில் முச்சந்தியில் நிறுத்தி சென்று விடுகிறார்கள். முகநூலை நம்பி காதலித்தால் முடிவில் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.
Comments