குடியரசு தினத்தையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு...

0 1010

குடியரசு தினத்தை ஒட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராணுவத்தினரும் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். 

குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் முப்படையினரின் அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடபெறுவதால், ராஜபாதை முதல் செங்கோட்டை வரையிலான பகுதிகள் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு வளையத்தில் இருந்து வருகிறது. 22,000 டெல்லி போலீசார், துணை ராணுவ படைவீரர்கள் பல்வேறு குழுக்களாக ஒருங்கிணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டை, சாந்தி சவுக் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட இடங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்நிலையங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன.

சந்தேகத்திற்குரியவர்களை முக அங்கீகாரம் முறையில் பரிசோதிப்பதற்காக பல இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் சிறப்பு ஆயுதப்படை காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இது தவிர 48 கம்பெனிகளை சேர்ந்த சிறப்பு ஆயுதப்படையினரும் டெல்லி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை என்எஸ்ஜி, எஸ்பிஜி மற்றும் ஐடிபிபி போன்ற அமைப்புக்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

டெல்லியில் பாரா கிளைடர்கள், பாரா மோட்டார்கள், ஹேங் கிளைடர்கள், ஆளில்லா சிறிய விமானங்கள், இலகுரக விமானம், ரிமோட் மூலம் இயக்கப்படும் விமானம், ஹாட் ஏர் பலூன்கள் ஆகியவை பறக்க அடுத்த மாதம் 15ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் முக்கிய சாலைகளில் விடிய விடிய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வாகன கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments