நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கோலாகலக் கொண்டாட்டம்...
குடியரசு தின விழா நாடெங்கும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் பிரமாண்ட அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிடுகிறார்.
குடியரசு தினத்தையொட்டி, இந்தியா கேட் அருகே உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து ராஜபாதையில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியேற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்பார்.
இந்தியாவின் ராணுவ ஆற்றலை பறைசாற்றும் வகையில் வீரர்கள் அணிவகுத்து வருவார்கள். ராணுவத்தில் இடம்பெற்றுள்ள அதிநவீன தளவாடங்களும், கலாசாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெறும்.
செயற்கைக் கோள் முறியடிப்பு கருவியான சக்தி , ராணுவத்தின் போர் பீரங்கியான பீஷ்மா, புதிதாக படையில் இணைக்கப்பட்டிருக்கும் சினூக், அபச்சே ஹெலிகாப்டர்கள் , பாராசூட் வீரர்களின் சாகசம், வஜ்ரா, தனுஷ் துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை இந்த அணிவகுப்பில் இடம் பெறுகின்றன. 5 ஜாகுவார் தீப் தாக்குதல் விமான்களும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்த உள்ளன. சுகோய் 30 எம்.கே.ஐ.ஜெட் விமானங்களும் வானத்தில் நேர்க்கோட்டில் பறந்து சாகசம் செய்ய உள்ளன
மாநில அரசுகளின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் 16 வாகனங்களும் யூனியன் பிரதேசங்களின் 6 வாகனங்களும் அணிவகுப்பில் இடம் பெறுகின்றன. பள்ளி மாணவ-மாணவிகள் யோகா மற்றும் ஆன்மீக மதிப்பீடுகளை தங்கள் உடல்களால் நிகழ்த்திக் காட்டுவார்கள்.
இந்த 90 நிமிட அணிவகுப்பு நிகழ்ச்சியை, பிரேசில் அதிபர் போல்சோனரோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்வையிடுகிறார். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
Comments