பூமியிலிருந்து தெரியும் நீல நிற வானம்.. உயரே செல்ல செல்ல கருப்பாக தெரிவது ஏன்..?
நாம் வாழும் பூமியில் இருந்து பகலில் வானத்தை பார்த்தால் நீல நிறமாகவே தெரிகிறது. ஆனால் சந்திரயான், மங்கள்யான் உள்ளிட்ட விண்கலங்கள் விண்ணிற்கு சென்ற காட்சிகளை நாம் பார்த்தால் வளிமண்டலம் கருமை நிறமாக இருப்பதை கவனிக்க முடியும். இதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.
ஒளி சிதறல்:
ஒளி எப்போதுமே நேராக தான் பயணிக்கும். ஏதேனும் பொருளின் மீது பட்டால் மட்டுமே பிரதிபலிக்கும். சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கற்றைகள், பூமியை நோக்கி வரும் போது ஒளிசிதறல் ஏற்படுகிறது.
நீல நிற வானம்:
சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கதிர்கள் பூமியை நோக்கி வரும் போது, வானில் இருக்கும் தூசு மற்றும் துகள்களால் சிதறடிக்கப்படுகிறது. இதனால் தான் பூமியில் இருந்து பார்க்கும் போது வானம் நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது.
கருமையான அண்டவெளி:
அண்டவெளி முழுவதுமே கருமை நிறமாக தான் உள்ளது. பூமியை சுற்றி இருக்கும் வானம் மட்டும் நீல நிறத்தில் இருக்கும் போது, அதை தாண்டி உள்ள வளிமண்டலம் மட்டும் கருமையாக காட்சி அளிக்கிறது. ஏனென்றால் பூமிக்கு உயரே குறிப்பிட்ட தொலைவிற்கு பிறகுள்ள வளிமண்டலத்தில் ஒளியை சிதறடிக்கும் காற்று மற்றும் தூசு துகள்கள் இல்லை என்பதே இதற்கு காரணம். பூமியில் இருந்து உயர செல்ல செல்ல காற்றின் அடர்த்தி குறைவதால் ஒளி சிதறலும் குறைகிறது. இதன் காரணமாக வளிமண்டலம் பார்ப்பதற்கு கருப்பாக தெரியும்.
நிலவில் இரவும், பகலும் ஒன்றே:
அண்டவெளியில் காற்றோ, தூசு பொருட்களோ இல்லை என்பதால் சூரிய ஒளி சிதறல் அடைவதில்லை. எனவே வளிமண்டலம் இல்லாத நிலவில் இரவு, பகல் என எல்லாம் ஒன்றே. நிலவில் எந்த நேரம் பார்த்தாலும் வானம் கருமையாக தான் காட்சி அளிக்கும்.
வெற்றிடம்:
அதே போல மற்றொரு கருத்தையும் அறிவியலாளர்கள் முன் வைக்கிறார்கள். நமது பிரபஞ்சம் தோன்றி சுமார் 15 பில்லியன் ஆண்டுகள் தான் ஆகியிருக்கும் என கருதப்படுகிறது. மேலும் நமது பிரபஞ்சத்தில் பெரும்பாலான பகுதிகள் வெற்றிடமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் கூட அண்டவெளி கருமை நிறத்தை பிரதிபலிக்கலாம் என சில அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
Comments