காவலர் தேர்வில் களவாணிதனம்.. குற்றவாளிகளுக்கே வகுப்பெடுக்கும் வகையில் நூதன மோசடி
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு போல, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சார்பு ஆய்வாளர், 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 12, 13ம் தேதிகளில் 969 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்விலும், கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் நிலை காவலர் 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வேலூர் மாவட்டம் மூஞ்சூர்பட்டில் உள்ள சிகரம் தொடு பயிற்சி மையத்தில் பயின்றவர்கள், 2ம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 130க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் முன்கூட்டியே திட்டமிட்டு ஆன்லைனில் நள்ளிரவு நேரத்தில் விண்ணப்பித்து குறிப்பிட்ட மையத்தை தேர்வு செய்ததாகவும், பின்னர் சிலரது உதவியுடன் எழுத்துத் தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தேர்வில் வெற்றி பெற்றவர்களின் வரிசை எண்களை பரிசோதித்து பார்த்தபோது, குறிப்பிட்ட ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களின் பதிவு எண் வரிசையாக உள்ளதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வும், உடல்தகுதி தேர்வும் முடிந்துவிட்டதால் இன்னும் சில நாள்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன. அந்த ஆணைகள் வழங்கப்படும் முன்பு, விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிற தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதிலும் சிகரம் தொடு பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அதுகுறித்தும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Comments