கொரோனா பாதிப்பா..? இந்தியாவிலும் கண்காணிப்பு தீவிரம்...

0 1383

இந்தியாவிலும் கொரோனாவைரஸ் தாக்குதல் தொற்றி விடுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ள நிலையில், கோவை, திருச்சி  உள்ளிட்ட மேலும் 12 விமான நிலையங்களில் பயணியர் சோதனையை தீவிரமாக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் கொரோனாவைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு அதன் பாதிப்பு இருக்கும் நிலையில், இவர்களில் 237 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனாவைரஸ் ஊற்றுக்கண்ணான ஊகானில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 11 பேர் தனிவார்டுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டனர். இவர்களில் 4 பேருக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதியாகி உள்ளது.

எஞ்சியவர்களில் இருவர் திருவனந்தபுரத்திலும், திருச்சூர், கொச்சி, கோழிக்கோடு மற்றும் பத்தனம்திட்டாவில் தலா ஒருவரும் தனிவார்டில் வைக்கப்பட்டுள்ளனர். மும்பையில் நேற்று தனிவார்டில் வைக்கப்பட்ட 3 பேருக்கு சாதாரண ஜலதோஷம் தவிர்த்து வேறு நோய் அறிகுறிகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோய் தொற்றை தடுக்கும் நோக்கில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட விமான நிலையங்களில் சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து வரும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் உள்ளிட்ட சோதனைகள் நடக்கின்றன.

இந்த நிலையில் கோவை, திருச்சி, விசாகப்பட்டினம், அஹமதாபாத், அமிர்தசரஸ், குவஹாத்தி, கயா, திருவனந்தபுரம், ஜெய்பூர் உள்ளிட்ட மேலும் 12 விமான நிலையங்களில் கொரோனாவைரஸ் தொற்று குறித்த அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

ஊகானில் இந்திய மாணவர்கள் சுமார் 700 பேர் வரை படித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் பலர், சீன புத்தாண்டு விடுமுறையை ஒட்டி இந்தியா அல்லது வேறு சில நாடுகளுக்கு திரும்பி உள்ளனர். இவர்களில் யாருக்காவது நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகளைப் பொறுத்தவரை, பிரான்சில் 3 பேருக்கு கொரோனாவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, மெக்காவ், தைவான், சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதல் உறுதியான நிலையில், அமெரிக்காவிலும், நேபாளத்திலும் அது பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments