அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி கைது
அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்தது உள்ளிட்ட புகாரின்பேரில், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர்.
கோவையை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான கே.சி. பழனிசாமி, www.admk.org.in என்ற பெயரில், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவ படத்துடன் இரட்டை சிலை சின்னத்துடன் போலி இணையதளம் நடத்தி வருவதாக சூலூர் காவல்நிலையத்தில் முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் புகார் அளித்தார். இதன்பேரில் கோவையிலுள்ள கே.சி. பழனிசாமி வீட்டுக்கு சென்று அவரை அதிகாலையில் போலீஸார் கைது செய்தனர்.
இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் ஏமாற்றுதல், நம்பியவர்களை ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், தவறான ஆவணத்தை உருவாக்குதல், பொய் ஆவணம் உருவாக்கி ஏமாற்றுதல், ஏமாற்ற திட்டமிட்டு ஆவணம் உருவாக்குதல், சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்துதல், சொத்து அடையாளத்தை உருவாக்கும் கருவியை வைத்திருத்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழும், தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவுகளின் கீழும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கே.சி. பழனிசாமியை சூலூர் காவல்நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கே.சி. பழனிசாமியை சந்திக்க மூத்த வழக்கறிஞர் சிவக்குமார் உள்ளிட்ட 3 வழக்கறிஞர்கள் வந்தனர். அப்போது அவர்களை அங்கிருந்த போலீசார், காவல்நிலையத்துக்குள் விடாததால், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் துணை கண்காணிப்பாளர் பாலமுருகனை 3 பேரும் சந்தித்து பேசினர். இதன்பின்னர் கே.சி. பழனிசாமியை சந்திக்க மூத்த வழக்கறிஞர் சிவக்குமாரை மட்டும் போலீசார் அனுமதித்தனர். அதன்படி கே.சி. பழனிசாமியை சந்தித்து பேசிவிட்டு அவர் திரும்பினார்.
Comments