குரூப்-4 முறைகேடு வழக்கு : 3 பேர் சிறையில் அடைப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் கைதான 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் குரூப் - 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார், தமிழக காவல்துறை இயக்குநரிடம் புகார் அளித்தார்.
இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
தேர்வு அதிகாரிகளாக செயல்பட்ட கீழக்கரை தாசில்தார், ராமேஸ்வரம் தாசில்தார் ஆகியோர் உள்ளிட்ட 12 பேரிடம் சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அங்கு விசாரணைக்கு ஆஜரான தேர்வர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் இருவர், அவர்களது நண்பரான ஆவடியை சேர்ந்த ஓட்டுநர் ஒருவரிடமும் விசாரணை நடைபெற்றது. பணிக்கு ஏற்றார் போல் தேர்வர்களிடம் இருந்து குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் 9 லட்சம் வரை பணம் பெறப்பட்டது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில், பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலக உதவியாளரான ரமேஷ் , எரிசக்தி துறையில் உதவியாளராக பணிபுரியும் திருக்குமரன் , இத்தேர்வில் வெற்றிப்பெற்ற திருவல்லிக்கேணி நிதீஷ்குமார் ஆகியோர் மூவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி நாகராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய இடைத்தரகர் ஒருவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.
Comments