குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை வருமா?

0 869

குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகள் விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அந்த விவரங்களை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்றும் 2018-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு பலன் அளிக்காததால் வேறு தீர்வு வேண்டும் என்று கோரி, பாரதிய ஜனதாவைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் விகாஸ் சிங், குற்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள 43 சதவீதம் பேர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே, அரசியல் கட்சிகள் குற்றப் பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்யக்கூடாது என்றும் அவர் வாதிட்டார்.

இதையடுத்து, குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் நிற்பதற்கு தடை விதிக்கும் வகையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து ஒருவார காலத்திற்குள் விவரமான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசியல் கட்சிகள் தங்கள் இணைய தளங்களிலும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் குற்றப் பின்னணியுடைய வேட்பாளர்களை பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் பின்னணியுடையவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட முடியுமா என்ற கோரிக்கையையும் பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments