காவல்நிலைய பலாத்காரம், உயிரிழப்புகள் மீது கட்டாயமாக நீதி விசாரணை தேவை - உச்சநீதிமன்றத்தில் மனு
காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு, பெண்கள் பலாத்காரம் போன்ற சம்பவங்களில் கட்டாய நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையின அத்துமீறல்கள் இது வரை காகிதத்தில் மட்டும் பதிவாகியிருப்பதாகவும் அவற்றின் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர் சுகாஸ் சக்மா புகார் தெரிவித்துள்ளார். சட்டப்பிரிவு 176 -1 ஏ வின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பத்தாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்த சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது. காவல்நிலையத்தில் ஒருவர் இறந்துவிட்டாலோ, காணாமல் போனாலோ , ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டாலோ நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது கட்டாயம் என்று இச்சட்டப்பிரிவு வலியுறுத்துகிறது.
ஆனால் இச்சட்டப்பிரிவை பயன்படுத்தாமல் இருப்பதால் குற்றம் புரிந்த காவல் அதிகாரிகளும் சிறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையுமில்லாமல் தப்பி விடுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
Comments