மிரட்டும் 'கொரோனா' வைரஸ்...! 13,000 விமானப் பயணிகளிடம் சோதனை..!
கொரோனா வைரஸ் பரவும் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இதுவரை 60 விமானங்களில் வந்த சுமார் 13 ஆயிரம் பயணிகளிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரசால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து சீனாவின் எந்த விமான நிலையத்தில் இருந்தும் இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்ய மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டது.
சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா? என பரிசோதனை செய்வதில் சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் வழிகாட்டுதல்களை பின்பற்ற விமான நிறுவனங்களை விமானப் போக்குவரத்து அமைச்சகமும் அறிவுறுத்தியுள்ளது.
விமான நிலையத்தில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனை குறித்து விமானத்திலேயே அறிவிப்பு வெளியிடவும், சீனாவுக்கு செல்லும் பயணிகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சின் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு கடந்த 22-ஆம் தேதி வரை 60 விமானங்களில் வந்த 12 ஆயிரத்து 828 பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பிரீத்தி சுதன் தெரிவித்தார்.
மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச மருத்துவமனைகளில் கண்காணிப்பு, ஆய்வக வசதி, நோய்த் தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ வசதிகள், கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு, காற்றோட்ட வசதி உள்ளிட்டவற்றை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments