கொரோனா வைரஸ்: சீனாவில் 5 நகரங்களுக்கு சீல் வைப்பு
சிங்கப்பூர், வியட்நாம் நாடுகளுக்கும் கொரோனாவைரஸ் தொற்று பரவி உள்ளது.
சீனாவின் ஊகானில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதியாகி உள்ள நிலையில், சிங்கப்பூரில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள அந்நாட்டு அரசாங்கம், இது மேலும் பரவாமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2003 ல் சிங்கப்பூரில் பரவிய சார்ஸ் வைரஸ் தாக்குதலை சமாளித்த அனுபவம் உள்ளதால் கொரோனா தாக்குதலை கட்டுப் படுத்துவதில் தங்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) தெரிவித்துள்ளார். அதே சமயம் 33 பேரை பலி வாங்கிய சார்ஸ் தாக்குதல் அளவிற்கு கொரோனாவைரஸ் பாதிப்பு இருக்காது என்று நம்புவதாகவும் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில் அவர் கூறி உள்ளார்.
கொரோனாவைரஸ் துவங்கிய ஊகானில் படிக்கும் இந்திய மாணவர்கள் 25 பேர் இந்தியா திரும்பி உள்ளனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் யாருக்கும் நோய் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயிரத்து 200 க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் ஊகானில் படித்து வருகின்றனர். அங்கிருக்கும் இந்தியர்கள் நிலைமை குறித்த விவரங்களை.+8618612083629 +8618612083617 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே சவூதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய நர்ஸ் ஒருவருக்கு கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறு என்றும் அவருக்கு மெர்ஸ் நோய் அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சீனாவில் கொரோனாவைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. ஊகான் நகரையும் தாண்டி இந்த வைரஸ் பரவி 830 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மேலும் பரவாமல் இருப்பதற்காக 5 நகரங்களில் லட்சக்கணக்கானோர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஒரு கோடிக்கும் அதிகம் மக்கள் தொகை கொண்ட ஊகான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டு அங்கிருந்து யாரும் மற்ற நகரங்களுக்கோ, மற்ற நகரத்தில் இருந்து ஊகானுக்கோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊகானைத் தொடர்ந்து 70 லட்சம் மக்கள் வசிக்கும் ஹூவாங்காங் நகரமும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பெய்ஜிங்கில் 26 பேருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
நாளை சீன புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் துவங்க நிலையில் லட்சக்கணக்கானோர் சீனாவுக்கு வந்து போக இருப்பதால் நோய் தொற்று பலமடங்கு அதிகரிக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஜப்பான், தாய்லாய்ந்து, தென் கொரியா, தைவான், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கொரோனாவைரஸ் தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
காட்டு விலங்குகளை உணவாக உட்கொள்ளுவதால் கொரோனாவைரஸ் தொற்று பரவியதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், பாம்புகளில் இருந்து இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், சீனாவில் ஹாங்ஷி (Huangshi) ஜியான்டோ,(Xiantao) ஜிபி, (Chibi) இஸோயு, (Ezhou) லிச்சுவான்,(Lichuan) கியான்ஜியாங் (Qianjiang) ஆகிய நகரங்களிலும் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. பொது நிகழ்சிகள், கலாச்சார விழாக்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சுற்றுலா பேக்கேஜ் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தொழில்துறையினருக்கு ஹுபேய் மாகாண நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், சீனப்பெருஞ்சுவர் உள்ளிட்ட புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களை மூடுவதாக சீன அரசு அறிவித்துள்ளது. மிங் டோம்ப்ஸ் (Ming Tombs) யின்ஷான் பகோடா, (Yinshan Pagoda)பேர்ட் நெஸ்ட் ஸ்டேடியம் ஆகியன மூடப்படுகின்றன. மேலும் ஹூபேய் (Hubei ) மாகாணத்தில் உள்ள ஜியானிங்(Xianning) ஜியாகான்(Xiaogan) என்ஷி( Enshi ) சிஜியாங்( Zhijiang) ஆகிய நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன.
ஜிங்ஸோவ் (Jingzhou) ஹுவாங்ஷி (Huangshi), கியான்ஜியாங்(Qianjiang) ஜியான்டோ(Xiantao), சிபி(Chibi), இசோஹு(Ezhou) ஹுவான்காங்( Huanggang) லிச்சுவான் (Lichuan) மற்றும் உகான் என 13 நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பல லட்சம் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
எல்லா விதமான போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 800 ஐ கடந்துள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயிரம் படுக்கை வசதி உள்ள மருத்துவமனையை உகான் நகரில் சீன அரசு அதிவேகமாக உருவாக்குகிறது
கொரோனாவைரஸ் தாக்குதல் சர்வதேச பங்குசந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. நேற்று நியூயார்க் பங்கு சந்தை வர்த்தக துவக்கத்தில் 200 புள்ளிகள் சரிந்தது. ஊகானுக்கு அப்பாலும் சீன அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதை அடுத்து இது பின்னர் ஓரளவு அதிகரித்து 29 ஆயிரத்து 160 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது.
Comments