சுங்கச்சாவடி காவலர் கொலை.. வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம்

0 1063

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் டோல்கேட்டில் பணியிலிருந்த காவலரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.  

சென்னையை அடுத்த திருநின்றவூர் பிரகாஷ்நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், பட்டாபிராம் அருகே சென்னை வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடியில் காவலராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று இரவு வழக்கம்போல பணியில் இருந்தபோது, அதே பகுதியில் சிவக்குமார், நரேஷ்குமார் ஆகிய 2 லாரி ஓட்டுநர்கள் தங்களது 2 லாரிகளை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்து கொண்டிருந்தனர்.

அப்போது பல்சர் மற்றும் புல்லட்டில் வந்த அடையாளம் தெரியாத வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர், சிவக்குமாரையும், நரேஷ் குமாரையும் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து கடுமையாக தாக்கி செல்போனையும், 4 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துள்ளனர்.

இருவரின் சத்தம் கேட்டு வெங்கடேசன் ஓடிவந்தபோது, அவரையும் 2 பேர் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் வெங்கடேசன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் சிவக்குமாரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இதைக்கண்ட லாரி ஓட்டுநர் நரேஷ்குமார், கொள்ளையர்களிடம் இருந்து நைசாக நழுவி, லாரியை எடுத்துக் கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. வெங்கடேசன் உயிரிழந்ததை கண்ட வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிள்களில் தப்பிவிட்டனர்.

இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் முத்தாபுதுப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மண்டை உடைந்த சிவக்குமாரை, கீழ்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் 10 தையல் போடப்பட்டுள்ளது.

பின்னர் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, வழிப்பறி கொள்ளையர்கள் தாங்கள் பயணித்த பகுதி நெடுகிலும் அட்டகாசத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அதாவது வெள்ளவெட்டில் முதலில் 2 பேரை தாக்கி வழிப்பறி செய்ததும், பிறகு அங்கிருந்து வந்து நெமிலிசேரியில் வேப்பம்பட்டை சேர்ந்த அசோக் என்பவரை கத்தியால் வெட்டி புல்லட் வாகனத்தையும், பணம், செல்போனையும் பறித்து கொண்டு வந்ததும், அதன்பிறகு சுங்கச்சாவடியில் தூங்கிக் கொண்டிருந்த லாரி ஓட்டுநர்களையும், காவலர் வெங்கடேசனையும் தாக்கியது தெரிய வந்துள்ளது.

2 பேரின் அடையாளமும், அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதும் தெரியவில்லை. அவர்களை முத்தாபுதுப்பேட்டை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே வழிப்பறி கொள்ளையர்களில் ஒருவனை செவ்வாய்பேட்டை போலீஸார் பிடித்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments