RO வரமா? சாபமா?
தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை தடை செய்ய சட்டம் இயற்றுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
சாதாரண நீரில் சுண்ணாம்பு, மெக்னீஷியம், பாஸ்பேட், இரும்பு, புளோரைடு, பைகார்பனேட் போன்ற பல்வேறு தாதுக்கள் கரைந்துள்ளன. அதன் அடர்த்தி திடப்பொருளின் மொத்த அளவு என்ற பொருள்படும் டிடிஎஸ் என்ற முறையில் அளவிடப்படுகிறது.
ஒரு லிட்டர் நீரில் கரைந்துள்ள தாதுக்களின் மொத்த அளவு 500 மில்லிகிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. ஆனால் குறைந்தபட்சம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்படவில்லை.
கேன் தண்ணீரை குடிப்பதை காட்டிலும் ஆர்ஒ எனப்படும் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் முறையில் சுத்திகரிக்கப்படும் தண்ணீரே பாதுகாப்பானது என்று கருதி, நகர்ப்புறம் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் ஆர்ஒ குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
ஆர்ஒ முறையில் நீரை சுத்திகரிக்கும்போது, டிடிஎஸ் அளவு 100க்கும் குறைவாகவே இருக்கிறது. இந்த நிலையில், 500 மில்லி கிராமுக்கும் குறைவாக இருக்கும் வகையில் குடிநீரை சுத்திகரிக்கும் ஆர்ஓ இயந்திரங்களுக்கு தடை விதிப்பது குறித்த சட்டத்தை உருவாக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த உத்தரவால், இனி RO தண்ணீர் குடிக்கலாமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் அரசு சார்பில் மெட்ரோ குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், கிராமப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள இடங்களில் டிடிஎஸ் அளவு ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என்பதால், ஆர்ஒ சுத்திகரிப்பு சாதனத்தை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். எனவே அவற்றுக்கு தடை விதித்தால் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், தேவையான டிடிஎஸ் அளவில் RO பில்டர்கள் சந்தையில் கிடைக்கிறது என்று ஆர்ஒ பில்டர் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
அதே சமயம், ஆர்ஒ முறை பில்டர்களால் அதிக அளவில் தண்ணீர் கழிவு நீராக வெளியேறி வீணாவதாகவும், குறைந்த அளவில் டிடிஎஸ் உள்ள தண்ணீரை உற்பத்தி செய்வதால் உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
நிலப்பகுதிக்கு ஏற்றவாறு தண்ணீரில் டிடிஎஸ் அளவு மாறுபடும் என்பதால், மக்களுக்கு சுகாதாரமான தண்ணீரை உறுதி செய்யாமல் RO பில்டரை மட்டும் தடை செய்வது மேலும் நிலைமையை மோசமாக்கும் என்ற கருத்தும் சூழலியாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
சுகாதார சீர்கேடு மற்றும் போதுமான தண்ணீர் கிடைக்காததால் ஐந்து வயதிற்கு உட்பட்ட ஆறு லட்சம் குழந்தைகள் ஒரு வருடத்தில் இந்தியாவில் இறப்பதாகவும், 15 லட்சம் குழந்தைகள் வயிற்று போக்கால் மட்டுமே இறப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான சர்வதேச நிதியம் தெரிவிக்கிறது.
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தரமான குடிநீரை இலவசமாக அரசு வழங்கும் வரை, இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டாக்கனி என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Comments